குப்பையில் கிடந்த உ.பி. முதல்-மந்திரி, பிரதமர் படங்களை குப்பை வண்டியில் எடுத்துச் சென்ற தொழிலாளியின் வேலை பறிபோனது!
உத்தரபிரதேசத்தில் ஒருவர் பிரதமர் மற்றும் உபி முதல்-மந்திரி ஆகியோரின் படங்களை குப்பை வண்டியில் எடுத்துச் சென்றுள்ளார்.
லக்னோ,
உத்தரபிரதேசத்தில் ஒருவர் குப்பை வண்டியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோரின் படங்களை எடுத்துச் சென்றுள்ளார். இதை கண்ட சிலர் அதை படம்பிடித்து சமூக வலைதளத்தில் பகிர்ந்தனர்.
உடனே அந்த ஒப்பந்தத் தொழிலாளியின் வேலை பறிபோனது. அவரை பணிநீக்கம் செய்து நிர்வாகம் உத்தரவிட்டது.
"உ.பி.யின் மதுரா நகர், நிகாமில் ஒப்பந்தத் தொழிலாளி ஒருவர், குப்பை வண்டியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் படங்களை எடுத்துச் சென்றதையடுத்துபணிநீக்கம் செய்யப்பட்டார்" என்று டுவிட்டரில் பத்திரிகையாளர் ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.
இந்திய தலைவர்களின் படங்கள் குப்பையில் கிடப்பதை தான் கண்டதாகவும், உடனே அவற்றை எடுத்துக்கொண்டு சென்றதாகவும் அந்த நபர் கூறினார்.
அவரை தடுத்து நிறுத்தி படம்பிடித்த சிலர் கூறியதாவது, "நாங்கள் இந்த புகைப்படங்களை எங்களுடன் எடுத்துச் செல்கிறோம். மோடி ஜி மற்றும் யோகி ஜி இந்த நாட்டின் ஆன்மாவாக இருப்பவர்கள்" என்று அவர்கள் கூறினர்.
அந்த ஒப்பந்தத் தொழிலாளி பிரதமர் மற்றும் சில தலைவர்களின் படங்களைத் தவறுதலாக குப்பை வண்டியில் எடுத்துக்கொண்டு சென்றதாக தெரியவந்துள்ளது என மதுரா-பிருந்தாவனின் கூடுதல் நகராட்சி ஆணையர் சத்யேந்திர குமார் திவாரி தெரிவித்தார்.