நீட் பயிற்சி வகுப்பிற்கு சென்ற மகளை அழைக்க சென்றவர் சுட்டுக்கொலை - தந்தையின் உடலை மடியில் வைத்து கதறி அழுத சிறுமி
உயிரிழந்த தனது தந்தையை மடியில் வைத்து மகள் கதறி அழும் நெஞ்சை உலுக்கும் வீடியோ சமூகவலைதளத்தில் பரவி வருகிறது.
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலத்தில் பல்வேறு ரவுடி கும்பல் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இந்த ரவுடி கும்பல் இடையே துப்பாக்கிச்சூடு தாக்குதல் சம்பவங்களும், உயிரிழப்பு சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.
இதனிடையே, ராஜஸ்தானின் சிகர் பகுதியை சேர்ந்தவர் தரசந்த் கட்வசரா. இவரது மகள் கொனிதா (வயது 16) அதேபகுதியில் உள்ள நீட் பயிற்சி மையத்தில் சேர்ந்து நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வருகிறார்.
இந்நிலையில், தனது மகள் கொனிதாவை நீட் பயிற்சி மையத்தில் இருந்து வீட்டிற்கு அழைத்து வர நேற்று மதியம் பயிற்சி தரசந்த் கட்வசரா மையத்திற்கு சென்றார்.
அப்போது, அந்த பயிற்சி மையம் அருகே இரு தரப்பு ரவுடி கும்பலுக்கு இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்த துப்பாக்கிச்சூட்டில் பிரபல ரவுடி ராஜூ தீக் தன் வீட்டின் வாசலில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
அவரை கொன்ற ரவுடி கும்பல் அங்கிருந்து தப்பி சென்றபோது தரசந்த் கட்வசராவிடமிருந்து அவரது கார் சாவியை வாங்க முயற்சித்தது. ஆனால், கார் சாவியை கொடுக்க தரசந்த் மறுத்ததால் ரவுடி கும்பலை சேர்ந்த நபர் தான் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு தரசந்தை சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடினார்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த தரசந்த் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டு நீட் பயிற்சி மையத்தில் இருந்து வெளியே வந்த கொனிதா தனது தந்தை தரசந்த் நடுரோட்டில் உயிரிழந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உயிரிழந்த தன் தந்தையின் உடலை தன் மடியில் வைத்து கொனிதா கதறி அழுதார். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி பலரது நெஞ்சை உலுக்கி வருகிறது.