கேரளாவில் கார் மீது சாய்ந்த சிறுவனை எட்டி உதைத்த வாலிபர் அதிரடி கைது
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம், தலசேரி பகுதியில் ஒரு வீட்டில் திருமண விழா நடந்தது.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம், தலசேரி பகுதியில் ஒரு வீட்டில் திருமண விழா நடந்தது. அந்த விழாவிற்கு முகமது ஷிசாந்த் (வயது20) என்ற வாலிபர் காரில் வந்தார். அவர் சாலையில் விதிகளை மீறி எதிர்திசையில் காரை நிறுத்திவிட்டு சென்றிருந்தார். அவர் திரும்பி வந்துபோது, அவரது காரில் ஒரு சிறுவன் சாய்ந்து நிற்பதை கண்டார். இதனால் ஆத்திரமடைந்த முகமது ஷிசாந்த், சிறுவன் என்றும் பாராமல் நெஞ்சில் எட்டி மிதித்து தள்ளினார்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் அந்த பகுதியில் இருந்த காவலர்களிடம் இதுபற்றி தகவல் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. சிறுவனும் அழுது கொண்டே வீட்டிற்கு புறப்பட்டான். ஆனால், அங்கிருந்தவர்கள் சிறுவனை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று முதலுதவி சிகிச்சை கொடுத்து அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் சிறுவன் தாக்கப்படும் காட்சிகள் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. தற்போது, இந்த காட்சிகள் சமூகவலைத்தளத்தில் வைலாக பரவி வருகிறது.
இதைப்பார்த்த கேரள போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். அதில் பாதிக்கப்பட்ட சிறுவன் ராஜஸ்தானை பூர்வீகமாக கொண்டவர் என்பதும், அந்த பகுதியில் தங்கியிருந்து வேலை செய்து வருவதும் தெரியவந்தது. இது தொடர்பாக கேரள குழந்தைகள் நலகுழும அதிகாரிகள் நடவடிக்கையால், போலீசார் முகமது ஷிசாந்தை அதிரடியாக கைது செய்தனர்.