7 ஆண்டு சிறையில் நபர்... கொலையான சிறுமி குடும்பத்துடன் வாழ்வது தெரிந்து அதிர்ச்சி
உத்தர பிரதேசத்தில் கொலை வழக்கில் 7 ஆண்டுகளாக சிறை வாசம் அனுபவிக்கும் நபர், கொலையான சிறுமி குடும்பத்துடன் ஒன்றாக வாழ்வது அறிந்து அதிர்ச்சி அடைந்து உள்ளார்.
அலிகார்,
உத்தர பிரதேசத்தின் அலிகார் நகரில் 2015-ம் ஆண்டு பிப்ரவரி 17-ந்தேதி தனது மகளை காணவில்லை என கூறி ஒருவர் போலீசில் புகார் அளித்து உள்ளார். தனது மகள் கோவிலுக்கு போனார். அதன்பின் அவர் திரும்பி வரவில்லை என புகாரில் தெரிவித்துள்ளார்.
கடைசியாக சிறுமி, விஷ்ணு கவுதம் என்பவருடன் காணப்பட்டார் என சிறுமியின் குடும்பத்தினர் கூறியுள்ளனர். இந்நிலையில், சில நாட்கள் கழித்து மார்ச் 24-ந்தேதி அடையாளம் தெரியாத சிறுமியின் உடலை போலீசார் கண்டெடுத்து உள்ளனர்.
அது தங்களின் மகள் என சிறுமியின் குடும்பத்தினர் அடையாளம் காட்டியுள்ளனர். இதனை தொடர்ந்து, தந்தவுலி கிராமத்தில் வசித்தவரான விஷ்ணுவை கொலை, தடயங்களை அழிக்க முயற்சித்த வழக்கில் போலீசார் கைது செய்தனர்.
2 ஆண்டுகளாக சிறையில் இருந்த விஷ்ணு 2017-ல் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஆனால், சிறுமியின் பெற்றோர் விஷ்ணுவை சிறைக்கு அனுப்பும்படி கோர்ட்டில் கேட்டு கொண்டனர். இதனால், வழக்கு விசாரணை முடிவில் மீண்டும், விஷ்ணு சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
எனினும், விஷ்ணுவின் தாயார், தனது மகன் நிரபராதி என நிரூபிக்கும் வகையில் ஆவணங்களை சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். நீண்ட தேடுதலுக்கு பின்னர் இறுதியாக, ஆக்ராவில் அந்த சிறுமி, திருமணம் செய்து, கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் ஒன்றாக வசிப்பது தெரிந்தது.
சிறுமியின் அடையாளம் பற்றி உறுதி செய்து கொண்ட விஷ்ணுவின் தாயார் அலிகாரில் உள்ள இந்து அமைப்புகளின் உதவியுடன் போலீசாரை அணுகியுள்ளார்.
இதனை கேட்டு ஆச்சரியமடைந்த போலீஸ் சூப்பிரெண்டு கலாநிதி உத்தரவின் பேரில், உடனடியாக போலீசார் செயல்பட்டு, மணமுடித்து தற்போது பெண்ணாக உள்ள, வழக்கில் தொடர்புடைய அந்த சிறுமியை நாக்லா சோக்கா கிராமத்தில் ஹத்ராஸ் கேட் பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.
அந்த பெண்ணின் மரபணு பரிசோதனை நடத்தி அடையாளம் உறுதி செய்யப்படும் என டி.எஸ்.பி. ராகவேந்திரா கூறியுள்ளார். இந்த நிலையில், பெண்ணின் குடும்பத்தினர் வழக்கில் சமரசம் செய்து கொள்ளும்படி தன்னை கட்டாயப்படுத்தி வருகின்றனர் என விஷ்ணுவின் தாயார் கூறியுள்ளார்.