கொரோனா ஊரடங்கு காதல்: மனைவி, மாமனார், மாமியாரை வெட்டிக்கொன்று கைக்குழந்தையுடன் போலீசில் சரணடைந்த நபர்
கொரோனா ஊரடங்கு காலத்தில் பேஸ்புக் மூலம் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
கவுகாத்தி,
அசாம் மாநிலம் கொலஹட் மாவட்டத்தை சேர்ந்தவர் சஞ்சீவ் கோஷ். அவரது மனைவி ஜானு கோஷ். இந்த தம்பதிக்கு சங்கமித்ரா (வயது 25) என்ற மகள் உள்ளார்.
2020 ஜனவரி மாதம் கொரோனா ஊரடங்கு காலத்தில் சங்கமித்ராவுக்கு பேஸ்புக் மூலம் நசிபுர் ரஹ்மான் (வயது 24) என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறிய நிலையில் 2020 அக்டோபர் மாதம் வீட்டை விட்டு வெளியேறிய இருவரும் கொல்கத்தாவில் வசித்து வந்தனர்.
ஆனால், சங்கமித்ராவை அவரது பெற்றோர் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். அதேவேளை, அதற்கு முன்னதாக கொல்கத்தா கோர்ட்டில் சங்கமித்ராவும், நசிபுர் ரஹ்மானும் திருமணம் செய்துகொண்டனர்.
அடுத்த ஆண்டு சங்கமித்ரா மீது அவரது பெற்றோரே போலீசில் புகார் அளித்துள்ளனர். திருட்டில் ஈடுபட்டதாக சங்கமித்ரா மீது புகார் அளிக்கபட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சங்கமித்ராவை கைது செய்தனர். அவர் ஒரு மாதம் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்ட சங்கமித்ரா தனது பெற்றோரின் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இதனையடுத்து 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் சங்கமித்ராவும், நசிபுர் ரஹ்மானும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இந்த முறை இருவரும் சென்னைக்கு வந்துள்ளனர். இருவரும் சென்னையில் 5 மாதங்கள் வசித்துள்ளனர். தொடர்ந்து சங்கமித்ரா கர்ப்பமடைந்த நிலையில் ஆகஸ்ட் மாதம் சென்னையில் இருந்து புறப்பட்ட இருவரும் மீண்டும் அசாம் மாநிலத்தின் கொலஹட் மாவட்டத்திற்கு சென்றுள்ளனர். அங்கு நசிபுர் ரஹ்மான் வீட்டில் சங்கமித்ரா வாழ்ந்து வந்துள்ளார். சங்க மித்ராவுக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆண் குழந்தை பிறந்துள்ளது.
ஆனால், தனது கணவர் நசிபுர் ரஹ்மான் தன்னை துன்புறுத்துவதாக கூறி குழந்தை பிறந்த 4 மாதங்கள் கழித்து கடந்த மார்ச் மாதம் சங்கமித்ரா தனது குழந்தையுடன் தன் பெற்றோரின் வீட்டிற்கு வந்துள்ளார். மேலும், நசிபுர் ரஹ்மான் மீது சங்கமித்ரா போலீசில் கொலை முயற்சி புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் நசிபுர் ரஹ்மானை போலீசார் கைது செய்தனர்.
சிறையில் அடைக்கப்பட்ட ரஹ்மான் 28 நாட்களுக்கு பின் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். ஜாமீனில் விடுதலை செய்யப்பட்ட உடன் ரஹ்மான் தனது குழந்தையை பார்க்க சங்கமித்ராவின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
ஆனால், சங்கமித்ராவின் பெற்றோர் குழந்தையை பார்க்க ரஹ்மானை அனுமதிக்கவில்லை. அதேவேளை, தன் குழந்தையை பார்க்க சென்ற தன் சகோதரனை சங்கமித்ராவின் குடும்ப உறுப்பினர்கள் தாக்கியதாக ரஹ்மானின் சகோதரர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
இந்த சூழ்நிலையில், கடந்த திங்கட்கிழமை நண்பகல் சங்கமிதாரவின் வீட்டிற்கு சென்ற ரஹ்மான் தான் மறைத்து எடுத்து சென்ற கத்தியால் மனைவி சங்கமித்ரா மாமனார் சஞ்சீவ் கோஷ், மாமியார் ஜானு கோஷ் ஆகியோரை சரமாரியாக வெட்டிக்கொன்றார். பின்னர், தனது 9 மாத குழந்தையை எடுத்துக்கொண்டு தன் தோளில் சுமந்தவாறு நசிபுர் ரஹ்மான் போலீசில் சரணடைந்தார்.
இதனை தொடர்ந்து நசிபுர் ரஹ்மானை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து குழந்தையை மீட்டனர். பின்னர் சங்கமித்ராவின் வீட்டிற்கு சென்ற போலீசார் அங்கு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த சங்கமித்ரா மற்றும் அவரது தந்தை, தாயாரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் அசாமில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில முதல் மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா உறுதியளித்துள்ளார். மேலும், கொலை செய்யப்பட்ட சங்கமித்ராவின் சகோதரியை சந்தித்து பிஸ்வா ஆறுதல் கூறினார்.