மனைவிக்கு விரித்த வலையில் சிக்கிய மாமியார்; மின்சாரம் பாய்ச்சிய கதவை திறந்ததால் விபரீதம்


மனைவிக்கு விரித்த வலையில் சிக்கிய மாமியார்; மின்சாரம் பாய்ச்சிய கதவை திறந்ததால் விபரீதம்
x

File Photo

மின்சாரம் பாய்ச்சப்பட்ட வீட்டின் கதவை 55 வயதான அந்த பெண் திறந்துள்ளார்.

போபால்,

மத்தியபிரதேச மாநிலம் பிடுல் மாவட்டம் சாய்ஹிடா என்ற கிராத்தை சேர்ந்தவருக்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

மது பழக்கம் கொண்ட அந்த நபர் மது குடித்துவிட்டு மனைவியை அவ்வப்போது தாக்கவும் செய்துள்ளார். இதனிடையே, கணவன் - மனைவி இடையே நேற்று முன் தினம் இரவு மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதையடுத்து அந்த பெண் தனது அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த பெண்ணின் கணவர் தனது மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். மாமியார் வீட்டின் முன் வாசலில் இரும்பால் ஆன கதவு உள்ளது.

இந்நிலையில், சண்டையிட்டுக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி மாமியார் வீட்டிற்கு வந்ததால் அந்த நபர் தனது மனைவி மீது மிகுந்த கோபத்தில் இருந்துள்ளார். பின்னர், தனது மனைவியை கொலை செய்ய எண்ணிய அந்த நபர் மாமியர் வீட்டின் இரும்பு கதவு மீது மின்சாரம் பாய்ச்சியுள்ளார். மின்சார ஒயரை இரும்பு கதவில் உரசும்படி வைத்து கதவில் மின்சாரத்தை பாய்ச்சியுள்ளார்.

ஆனால், மனைவியை கொலை செய்ய பின்னிய சதி வலையில் சிக்கி மாமியார் உயிரிழந்துள்ளார். மின்சாரம் பாய்ச்சிய அந்த கதவை அந்த நபரின் 55 வயதான மாமியார் திறந்துள்ளார். அப்போது, உடலில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே மாமியார் உயிரிழந்தார்.

இதை அருகே ஒளிந்து நின்று பார்த்துக்கொண்டிருந்த அந்த நபர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர், அப்பகுதியில் உள்ள மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

கதவை திறந்தபோது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த அந்த பெண்ணை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், மனைவியை கொல்ல சதி திட்டமிட்டு கதவில் மின்சாரம் பாய்ச்சி மாமியாரை கொன்றுவிட்டு தப்பியோடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்களை அதிகாரிகள் வெளியிடவில்லை.


Next Story