அமீரக அரச குடும்பத்தின் ஊழியர் என கூறி டெல்லி நட்சத்திர ஓட்டலில் மாதக்கணக்கில் தங்கி ரூ. 23 லட்சம் பில் கட்டாமல் சென்ற நபர்..!
அமீரக அரச குடும்பத்தின் ஊழியர் என கூறி டெல்லி நட்சத்திர ஓட்டலில் மாதக்கணக்கில் தங்கி ரூ. 23 லட்சம் பில் கட்டாமல் சென்ற நபர் தீவிர தேடுதலுக்கு பின் கைது செய்யப்பட்டார்.
டெல்லி,
டெல்லியின் சரோஜினி நகரில் லீலா பேலஸ் என்ற 5 நட்சத்திர ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலுக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி வந்த வாடிக்கையாளர் தான் ஐக்கிய அரபு அமீகத்தை சேர்ந்தவர் என்றும், அமீரக அரச குடும்பத்தில் வேலை செய்பவர் என்றும் கூறியும் ஓட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளார்.
3 மாதங்களுக்கு மேல் தங்கிய அந்த நபர் கடந்த நவம்பர் 20-ம் தேதி ஓட்டல் அறையை காலி செய்து வெளியேறியுள்ளார். ஓட்டலில் தங்கியதற்கு மொத்தம் 23 லட்ச ரூபாய் கட்டண தொகை (பில்) வந்துள்ளது. இதையடுத்து அந்த நபர் 23 லட்ச ரூபாய்க்கான காசோலை கொடுத்துவிட்டு ஓட்டலில் இருந்து வெளியேறியுள்ளார்.
ஆனால், அந்த காசோலையை ஓட்டல் நிர்வாகம் வங்கியில் செலுத்தியபோது அந்த வங்கி கணக்கில் பணம் இல்லாமல் காசோலை நிராகரிக்கப்பட்டது.
இதனால் அதிர்ச்சியடைந்த ஓட்டல் நிர்வாகம், ஓட்டலில் 3 மாதத்திற்கு மேல் தங்கிவிட்டு 23 லட்ச ரூபாய் கட்டண தொகையை செலுத்தாமல், போலி காசோலை கொடுத்து ஏமாற்றிவிட்டு தப்பியோடிய நபர் குறித்து போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், டெல்லி நட்சத்திர ஓட்டலில் மாதக்கணக்கில் தங்கிவிட்டு 23 லட்ச ரூபாய் செலுத்தாமல் மோசடி செய்து தலைமறைவான நபரை போலீசார் கர்நாடகாவில் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த நபர் முகமது ஷெரிப் (வயது 41) என்பதும் அவர் கர்நாடக மாநிலம் தக்சன கன்னடா பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை சிறையில் அடைத்தனர்.