மங்களூரு துறைமுகத்திற்கு 'எம்.எஸ்.சி. எர்மினியா' கன்டெய்னர் கப்பல் வருகை


மங்களூரு துறைமுகத்திற்கு எம்.எஸ்.சி. எர்மினியா  கன்டெய்னர் கப்பல் வருகை
x

மங்களூரு துறைமுகத்திற்கு ‘எம்.எஸ்.சி. எர்மினியா’ கன்டெய்னர் கப்பல் வருகை தந்துள்ளது. அந்த கப்பலுக்கு துறைமுகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மங்களூரு;

'எம்.எஸ்.சி. எர்மினியா' கப்பல்

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் புதிய மங்களூரு கப்பல் துறைமுகம் உள்ளது. இது கர்நாடகத்தில் பெரிய துறைமுகம் ஆகும். இந்த துறைமுகம் மூலம் பெட்ரோலிய பொருட்கள் உள்ளிட்ட சரக்குகள் கையாளப்படுகின்றன. இதற்காக வெளிநாடுகளில் இருந்து ஏராளமான கப்பல்கள் வந்து செல்கின்றன.

அண்மையில் மங்களூரு புதிய துறைமுகம் அருகே 15 மாலுமிகளுடன் வந்த சிரியா நாட்டு கப்பல், பழுதாகி நடுக்கடலில் நின்றது. அந்த கப்பலில் இருந்து மாலுமிகள் பத்திரமாக மீட்கப்பட்டாலும், 8 டன் சரக்குடன் கப்பல் அரபிக்கடலுக்குள் மூழ்கியது.

இந்த நிலையில் புகழ்பெற்ற 'எம்.எஸ்.சி. எர்மினியா' என்ற கன்டெய்னர் கப்பல் புதிய மங்களூரு துறைமுகத்துக்கு நேற்று முன்தினம் வந்தது. இது உலகின் மிகப்பெரிய கன்டெய்னர் கப்பல்களில் ஒன்றாகும். இந்த கப்பல் பெரும்பாலும் முக்கிய துறைமுகங்களுக்கு மட்டுமே வருகை தரும்.

மங்களூரு துறைமுகத்தில் 800-க்கும் மேற்பட்ட கன்டெய்னர்கள் ஏற்றுமதிக்கு தயாராக இருந்தது. அதன்காரணமாக எர்மினியா சரக்கு கப்பல் மங்களூரு துறைமுகத்துக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

வரவேற்பு

இதையடுத்து மங்களூரு துறைமுகம் புதிய மைல்கல்லை எட்டி உள்ளதாக நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது. எம்.எஸ்.சி. எர்மினியா கப்பலுக்கு மங்களூரு துறைமுகம் சார்பில் சிறிய கப்பல்கள் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.இதுகுறித்து புதிய மங்களூரு துறைமுகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சர்வதேச புகழ்பெற்ற எம்.எஸ்.சி. எர்மினியா கப்பல் மங்களூரு துறைமுகத்திற்கு வந்துள்ளது. இந்த கப்பல் மங்களூருவுக்கு வருகை தருவது இதுவே முதல் முறையாகும்.

இந்த கப்பல் 276.5 மீட்டர் நீளமும், 12.8 மீட்டர் அகலமும் கொண்டது ஆகும். இந்த கப்பல் 1,200-க்கும் மேற்பட்ட கன்டெய்னர்களை சுமந்து செல்லக்கூடியது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story