மணிப்பூரில் மீண்டும் ஊரடங்கு தளர்வு


மணிப்பூரில் மீண்டும் ஊரடங்கு தளர்வு
x
தினத்தந்தி 7 Sept 2023 4:02 PM IST (Updated: 7 Sept 2023 5:29 PM IST)
t-max-icont-min-icon

மணிப்பூர் மாநிலத்தில் உள்ள 5 பள்ளத்தாக்கு மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு தளர்வு அறிவித்து அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இம்பால்,

மணிப்பூர் மாநிலத்தில் இரு பிரிவினருக்கு இடையே கடந்த மே 3-ந் தேதி மோதல் ஏற்பட்டு, பின்னர் வன்முறையாக மாறியது. இந்த வன்முறையில் இதுவரை 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மணிப்பூரில் படிப்படியாக வன்முறை குறைந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்தது. இதனால் பள்ளத்தாக்கில் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டது.

இந்நிலையில் பிஷ்னுபுர், காக்சிங், தவுபால், இம்பால் மேற்கு, இம்பால் கிழக்கு ஆகிய 5 மாவட்டங்களில் நேற்று முன்தினம் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவையும் மீறி, பிஷ்னுபூர் மாவட்டத்தில் உள்ள பவுகாக்சோ இகாய் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதோடு, போலீசாரின் தடுப்புகளை அகற்றுவதற்கு முயன்றனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்ட நிலையில் அசாம் ரைபிள்ஸ், மணிப்பூர் போலீசார் பல சுற்றாக கண்ணீர் புகைகுண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்தனர்.

இதனிடையே ஒய்நாம் பகுதியில் நூற்றுக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து சாலையில் அமர்ந்து போலீசார் மற்றும் ராணுவத்தினர் போராட்டம் நடக்கும் பவுகாக்சோ இகாய்க்கு செல்வதை தடுத்தனர். ஊரடங்கு உத்தரவை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்தது.

இந்நிலையில், இந்த 5 மாவட்டங்களிலும் இன்று மீண்டும் ஊரடங்கு தளர்த்தப்பட்டு உள்ளது. அதன்படி, இன்றுகாக்சிங், இம்பால் மேற்கு, இம்பால் கிழக்கு ஆகிய மாவட்டங்களில் காலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை ஊரடங்கு தளர்த்தப்பட்டது. தவுபால் மாவட்டத்தில் காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும், பிஷ்னுபூர் மாவட்டத்தில் காலை 5 மணி முதல் காலை 11 வரை ஊரடங்கு தளர்த்தப்பட்டு உள்ளது.

அதிகாரியிடம் உரிய ஒப்புதல் பெறாமல், கூட்டம் அல்லது ஆர்ப்பாட்டம் அல்லது பேரணி போன்றவற்றில் ஈடுபடக்கூடாது என்று அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


Next Story