மணிப்பூர் வன்முறை சம்பவம் - தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன் வந்து விசாரணை
மணிப்பூர் கலவரத்தின் போது 2 பெண்களுக்கு எதிராக நடந்த வன்முறை சம்பவத்தில் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொள்ள உள்ளது.
புதுடெல்லி,
மணிப்பூர் வன்முறை நாளுக்குநாள் மோசமாகிக்கொண்டே செல்லும் நிலையில், இரண்டு பழங்குடியின இளம் பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி நடுரோட்டில் ஊர்வலமாக இழுத்து செல்வது போன்ற வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையை எழுப்பியுள்ளது. மணிப்பூரின் இந்த கொடூர சம்பவத்துக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித்தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ நாடு முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் மணிப்பூர் கலவரத்தின் போது 2 பெண்களுக்கு எதிராக நடந்த வன்முறை சம்பவத்தில் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொள்ள உள்ளது. மேலும் மணிப்பூர் சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு அறிவுறுத்தியுள்ளது.