மணிப்பூர் கலவரம்: நிவாரணப்பணிகளை கண்காணிக்க 3 பெண் நீதிபதிகள் குழு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
மணிப்பூர் கலவரம் தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, நிவாரணப்பணிகளை பார்வையிட 3 பெண் நீதிபதிகள் குழுவை நியமித்து உத்தரவிட்டது.
புதுடெல்லி,
மணிப்பூரில் கடந்த மே மாதம் மெய்தி இனத்தவருக்கும், குகி இனத்தவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பலர் பலியானார்கள். இந்த நிலையில் மே மாதம் 4-ந் தேதி குகி இனத்தை சேர்ந்த 2 பழங்குடியின பெண்கள் ஆடைகள் இன்றி ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி இந்தியாவையே உலுக்கியது.
இதற்கிடையே மணிப்பூரில் பெண்கள் மீதான வன்முறை குறித்து சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து கொண்டது.
இந்த வழக்குகளை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு மாநில அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து அதிருப்தியை வெளியிட்டது. மணிப்பூரில் மாநில அரசு செயல்படுகிறதா?, மணிப்பூரில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது, மணிப்பூரில் காவல்துறை என்னதான் செய்கிறது? என சரமாரி கேள்விகளையும் கண்டனங்களையும் நீதிபதிகள் முன்வைத்தனர்.
இது தொடர்பாக பதில் அளிக்க மணிப்பூர் மாநில டி.ஜி.பி. நேரில் ஆஜராக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மணிப்பூர் மாநில தலைமை செயலாளர் வினீத் ஜோஷி மற்றும் டி.ஜி.பி. ராஜீவ் சிங் ஆகியோர் நேரில் ஆஜரானார்கள்.
பின்னர் அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணி வாதிட்டதாவது:-
வன்முறை பாதித்த மாவட்டங்களில், மூத்த போலீஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டு உள்ளது. போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான இந்த குழு கலவரம் குறித்து விசாரணை நடத்தும். பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க பெண்கள் மட்டும் அடங்கிய விசாரணை குழு அமைக்கப்பட்டு உள்ளது.
மேலும் மாவட்ட வாரியாக சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த விசாரணையை டி.ஐ.ஜி., டி.ஜி.பி. கண்காணிப்பார்கள். வெளியில் இருந்து வரும் உத்தரவின் அடிப்படையில் நடக்கும் விசாரணை நம்பிக்கையை ஏற்படுத்தாது. மணிப்பூர் விவகாரத்தை முதிர்ச்சியடைந்த நிலையில் மத்திய அரசு கையாண்டு வருகிறது.
இவ்வாறு அவர் வாதிட்டார்.
திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் வழக்கு தொடர்ந்த மகுவா மொய்த்ரா சார்பில் ஆஜரான வக்கீல் கூறுகையில், "கலவர வழக்கில் இறந்தவர்களின் உடல்களை குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
இதற்கு பதில் அளித்த அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணி, "பல தலையீடுகள் காரணமாக உடல்களை பாதிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைக்கவில்லை. ஆனால், அரசுக்கு விருப்பமில்லை என்ற பொய்யான தோற்றம் உருவாக்கப்பட்டு உள்ளது. இது மிகவும் சிக்கலான சூழ்நிலை" என்றார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட சுப்ரீம் கோர்ட்டு, 'மணிப்பூரில் இனக்கலவரம் தொடர்பான போலீஸ் விசாரணையை மேற்பார்வையிட மராட்டிய மாநில முன்னாள் டி.ஜி.பி. தத்தாத்ரே பட்சல்கிகரை நியமித்தது. பெண்களை நிர்வாணமாக அழைத்து சென்றது உள்பட 11 பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிப்பதற்காக சி.பி.ஐ. விசாரணை குழுவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து 5 அல்லது 6 துணை சூப்பிரண்டு அந்தஸ்து அதிகாரிகளை நியமிக்கவும் முன்மொழிந்தது.
நிவாரணம், மறுவாழ்வு, வீட்டு மனைகள் மற்றும் வழிபாட்டு தலங்களை மறுகட்டமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்பார்வையிட ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதிகள் கீதா மிட்டல், ஷாலினி பி ஜோஷி, ஆஷா மேனன் ஆகியோர் அடங்கிய குழுவை அமைக்கவும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த குழு நிவாரண முகாம்களையும், மணிப்பூரில் நிலவும் நிலவரத்தையும் கண்காணிக்கும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.