மணிப்பூரில் 2 வீடுகள் தீவைத்து எரிப்பு: தொடர்ந்து பதற்றம்
மணிப்பூரில் 2 வீடுகளை வன்முறையாளர்கள் தீவைத்து எரித்தனர். மாநிலத்தின் நிலைமை தொடர்ந்து பதற்றமாக இருப்பதாக காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இம்பால்,
மணிப்பூர் மாநிலத்தில் இடஒதுக்கீடு விவகாரத்தில் மெய்தி மற்றும் குகி இன மக்களுக்கு இடையே கடந்த மே மாதம் 3-ந் தேதி பெரும் வன்முறை வெடித்தது. 3 மாதங்களாக நடந்து வரும் வன்முறைகளில் 160-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.
நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்ததோடு, ஆயிரக்கணக்கான மக்கள் சொந்த மண்ணிலேயே அகதிகளாகி நிவாரண முகாம்களில் தங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மாநிலத்தில் அமைதியை மீட்டெடுக்க மாநில காவல்துறையுடன் பல்வேறு மத்திய படைகளும் குவிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் அங்கு வன்முறை முழுமையாக முடிவுக்கு வரவில்லை.
வீடுகள் தீவைத்து எரிப்பு
இந்த நிலையில் இம்பால் மேற்கு மாவட்டத்தில் உள்ள 2 வீடுகளை வன்முறையாளர்கள் நேற்று அதிகாலை தீவைத்து எரித்தனர். அந்த வீடுகள் குடியிருப்பாளர்களால் கைவிடப்பட்டு காலியாக இருந்ததால் இந்த சம்பவத்தில் உயிரிழப்பு அல்லது படுகாயம் போன்ற அசம்பாவிதங்கள் எதுவும் நிகழவில்லை. வீடுகளை பாதுகாக்கும் பணி சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ராணுவ வீரர்கள் நேற்று காலை அங்கிருந்து வெளியேறி கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் வன்முறையாளர்கள் வீடுகளை தீவைத்து எரித்தது தெரியவந்துள்ளது.
ஊரடங்கு தளர்வு நீட்டிப்பு
இதனிடையே மாநிலத்தின் தற்போதைய நிலை குறித்து காவல் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில், "மாநிலத்தில் நிலைமை இன்னும் கொந்தளிப்பாகவும், பதற்றமாகவும் உள்ளது. ஆனால் கட்டுப்பாட்டில் உள்ளது. வன்முறையாளர்களின் ஆதிக்கம் மிகுந்த பகுதிகளில் அவர்களை கைது செய்வதற்காக பாதுகாப்பு படைகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன" என கூறப்பட்டுள்ளது.
அதே சமயம் சட்டம் ஒழுங்கு நிலைமையில் முன்னேற்றம் ஏற்படுவதைக் கருத்தில் கொண்டு மணிப்பூர் அரசு இம்பால் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு தளர்வு காலத்தை மேலும் ஒரு மணி நேரம் நீட்டித்துள்ளது.
அதன்படி அந்த 2 மாவட்டங்களில் காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.