பேரிடர் மீட்பு பயிற்சி ஒத்திகையின் போது ஆற்றில் அடித்து செல்லப்பட்ட தன்னார்வலர் உயிரிழப்பு - அதிர்ச்சி சம்பவம்
பேரிடர் மீட்பு பயிற்சி ஒத்திகையின் போது தன்னார்வலர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் மத்தனம்திட்டா மாவட்டத்தில் கீழுவைப்பூர் பகுதியில் மனிபலா ஆற்றில் பேரிடர் மீட்பு பயிற்சி ஒத்திகை நேற்று நடைபெற்றது.
இதில், பினு சோமன் (வயது 34) என்ற நபர் தன்னார்வலராக பங்கேற்றார். ஆற்றில் வெள்ளம் வந்து அதில் தத்தளிப்பது போன்று பினு முயற்சிக்கும்போது அவரை பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்து சென்று மீட்பதே பயிற்சியில் திட்டமாகும்.
பினு சோமன் ஆற்றுக்குள் தத்தளிப்பதுபோன்று ஈடுபட்டுக்கொண்டிருக்க திடீரென ஆற்று நீரில் அவர் அடித்து செல்லப்பட்டார். பேரிடர் மீட்பு பயிற்சி ஒத்திகையின் போது சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கை, பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளாததால் பினு ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்டார்.
மேலும், பேரிடர் மீட்பு பயிற்சி குழுவினர் விரைந்து வராததால் பினு ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்டார். ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பினு நீண்ட தேடுதலுக்கு பின் பிணமாக மீட்கப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பேரிடர் மீட்பு பயிற்சி ஒத்திகையின் போது தன்னார்வலர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக துறை ரீதியில் விரிவான விசாரணை நடத்த கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.