மராட்டியம்: 3 பேருக்கு பி.ஏ.5, 16 பேருக்கு பி.ஏ.2.75 கொரோனா தொற்று உறுதி


மராட்டியம்:  3 பேருக்கு பி.ஏ.5, 16 பேருக்கு பி.ஏ.2.75 கொரோனா தொற்று உறுதி
x

மராட்டியத்தில் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்ட 1,812 பேரில் 3 பேருக்கு பி.ஏ.5 தொற்றும் மற்றும் 16 பேருக்கு பி.ஏ.2.75 தொற்றும் உறுதி செய்யப்பட்டு உள்ளது.



மும்பை,



இந்தியாவில் தொடர்ந்து சரிவை சந்தித்து வந்த தினசரி கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக 17 ஆயிரம் எண்ணிக்கைக்கு கூடுதலாக பதிவாகி வருகிறது. நாட்டின் முதல் மற்றும் 2வது கொரோனா அலையின்போது அதிக பாதிப்பிற்குள்ளான மாநிலங்களின் வரிசையில் முதல் இடத்தில் மராட்டியம் இருந்தது.

இதுவரை டெல்டா, டெல்டா பிளஸ் மற்றும் ஒமைக்ரான் என்றும் பின்னர் பி.ஏ. வகை என தொற்று பாதிப்புகளை ஏற்படுத்தி வந்த வைரஸ் மீண்டும் உருமாற்றம் அடைந்து வருகிறது என்ற அதிர்ச்சி தகவலும் தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்த போதிலும், லேசான அறிகுறிகளே அதிகளவில் காணப்படுகின்றன என நிபுணர்கள் கூறியுள்ளனர். எனினும், பூஸ்டர் டோஸ் செலுத்தி கொள்ளும்படியும், சமூக இடைவெளி மற்றும் முககவசங்களை அணிவது உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றும்படியும் அறிவுறுத்தி வருகின்றனர்.

புதிய உருமாற்றம் அடைந்த பாதிப்புகள் பற்றி நிபுணர்கள் எச்சரித்து வரும் நிலையில், மராட்டியத்தில் புதிதாக 1,812 பேருக்கு கொரோனா பாதிப்புகள் இன்று ஏற்பட்டு உள்ளன. நேற்று 1,931 பேராக அது இருந்தது. 1,675 பேர் (நேற்று 1,953 பேர்) குணமடைந்து சென்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனால், மராட்டியத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் மொத்த எண்ணிக்கை 12,011 ஆக உள்ளது. ஒருவர் உயிரிழந்து உள்ளார். தொற்று ஏற்பட்ட 1,812 பேரில் 3 பேருக்கு பி.ஏ.5 தொற்றும் மற்றும் 16 பேருக்கு பி.ஏ.2.75 வகை கொரோனாவின் உருமாறிய தொற்றும் ஏற்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது.


Next Story