உ.பி: பட்டாசு கடைகளில் பயங்கர தீ விபத்து - 12 பேர் காயம்


உ.பி: பட்டாசு கடைகளில் பயங்கர தீ விபத்து - 12 பேர் காயம்
x

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது.

லக்னோ,

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மக்கள் புத்தாடை அணிந்து, கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி, இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும், வாழ்த்துகளை பரிமாறியும் தீபாவளியை கொண்டாடினர். இதனிடையே, பட்டாசு வெடிக்கும்போது பல்வேறு இடங்களில் தீவிபத்துகளும் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் மதுரா மாவட்டம் கோபால்பக் பகுதியில் உள்ள பட்டாசு கடையில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ அருகில் இருந்த பட்டாசு கடைகளுக்கும் பரவியதால் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில், கடைகளில் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறின.

இந்த தீ விபத்து குறித்து அறிந்த போலீசார், தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று கடைகளில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். மேலும், இந்த தீ விபத்தில் படுகாயமடைந்த 12 பேரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அதில் 9 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், இதில் 26 கடைகள் முற்றிலும் நாசமானதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தீ விபத்து குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.


Next Story