வயது முதிர்வு, நினைப்பது ஒன்று பேசுவது ஒன்றாக உள்ளது: நிதிஷ் குமாரை சாடிய பிரசாந்த் கிஷோர்
வயது முதிர்வால் பாதிக்கப்பட்டு, நினைப்பது ஒன்று பேசுவது ஒன்றாக உள்ளது என நிதிஷ் குமாரை பிரசாந்த் கிஷோர் சாடியுள்ளார்.
பாட்னா,
அரசியல் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் ஜன் சுராஜ் என்ற பெயரில் 3 ஆயிரத்து 500 கி.மீ.க்கான நீண்டதூர பாதயாத்திரையை தொடங்கியுள்ளார். அவர் தனது நடைபயணத்தின்போது கடந்த வியாழக்கிழமை பேசும்போது, சில நாட்களுக்கு முன்பு நிதிஷ் குமாரை சந்தித்தபோது, மீண்டும் ஜே.டி.(யு) கட்சியில் இணைந்து தன்னுடன் இணைந்து பணியாற்றும்படி என்னிடம் கூறினார்.
நீங்கள் என் அரசியல் வாரிசு என்று என்னிடம் கூறினார். ஜன் சுராஜ் பாதயாத்திரையை கைவிடும்படி கூறினார். ஆனால், எனக்காக முதல்-மந்திரி நாற்காலியை நிதிஷ்குமார் காலி செய்தாலும், நிதிஷ்குமாருடன் நான் இணைந்து பணியாற்ற மாட்டேன் என்று பேசினார்.
கடந்த 2018-ம் ஆண்டு ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் நிதிஷ் குமாரால் சேர்க்கப்பட்டு தேசிய துணை தலைவர் பதவியில் அமர வைக்கப்பட்ட கிஷோர், பின்பு பா.ஜ.க. அரசின் குடியுரிமை திருத்த சட்டம் பற்றிய சர்ச்சையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
முழுநேர அரசியல்வாதியாக மாறியிருக்கும் கிஷோர், யாத்திரைக்கு பின்னர் தனி கட்சி தொடங்கும் திட்டத்திலும் உள்ளார். இந்த சூழலில், நிதிஷ் குமார் கூறினார் என கிஷோர் பேசியது சர்ச்சை ஏற்படுத்தியது.
இதற்கு பதிலளித்த நிதிஷ் குமார், கிஷோர் கூறியது பொய். அவர் என்ன வேண்டுமென்றாலும் பேசட்டும். நாங்கள் செய்வதற்கு ஒன்றும் இல்லை. நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு, என்னை காங்கிரசுடன் இணையும்படி கிஷோர் கூறினார். அவர் பா.ஜ.க.வுக்கு சென்று விட்டார். அதற்கேற்பவே செயல்பட்டு வருகிறார் என பதில் கூறினார்.
இதுபற்றி கிஷோர் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, பா.ஜ.க.வுடன் சேர்ந்து நான் செயல்படுகிறேன் என நிதிஷ் குமார் கூறுகிறார். பின்னர், காங்கிரசுடன் அவரை இணையும்படி கேட்டு கொண்டேன் என்றும் கூறுகிறார்.
எப்படி இது சாத்தியம்? பா.ஜ.க.வை நான் ஆதரிக்கிறேன் என்றால், காங்கிரசை பலப்படுத்தும்படி அவரிடம் நான் ஏன் கூற போகிறேன்? அவர் கூறிய 2-வது விசயம் சரி என்றால், முதல் விசயம் தவறாகி விடும்.
அவருக்கு வயது முதிர்வு ஏற்பட்டு விட்டது. அதனால், மாயையில் சிக்கி கொண்டுள்ளார். நிதிஷ் குமார் அரசியல் ரீதியாக தனித்து விடப்பட்டு உள்ளார். தன்னை சுற்றியுள்ள மக்களை கூட அவர் நம்புவது கிடையாது. இந்த பதற்றத்தினால், அவர் நினைப்பது ஒன்று பேசுவது ஒன்றாக உள்ளது என பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.
7 கட்சிகள் கொண்டு ஆளும் கட்சியாக பீகாரில் உள்ள கூட்டணியானது (மகாகத்பந்தன்) அடுத்த சட்டசபை தேர்தல் வரை கூட நிலைக்காது என கடந்த மாதம் செய்தியாளர்களிடம் பேசும்போது தனது கணிப்பை கிஷோர் வெளியிட்டார்.