மேட்ரிமோனியலில் சந்திப்பு; பலாத்காரம், கருக்கலைப்பு... எய்ம்ஸ் ஆராய்ச்சி மாணவரின் வக்கிரம்


மேட்ரிமோனியலில் சந்திப்பு; பலாத்காரம், கருக்கலைப்பு... எய்ம்ஸ் ஆராய்ச்சி மாணவரின் வக்கிரம்
x

ரூ.25 லட்சம் பணம் மற்றும் சொகுசு கார் ஒன்றை வரதட்சணையாக தர வேண்டும் என பெண் வீட்டாரிடம் வலியுறுத்தினர்.

காசியாபாத்,

டெல்லி எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சி படிப்பை படித்து வந்த நபர் ஒருவர் மேட்ரிமோனியல் திருமண தளம் வழியே பெண் தேடியுள்ளார்.

இதில் குறிப்பிட்ட பெண் ஒருவரை திருமணம் செய்வது என்று முடிவானது. அவர்கள் இருவரும் திருமணம் செய்ய இருந்தனர். திருமண மகிழ்ச்சியில் பெண்ணும், அவரது வீட்டாரும் இருந்தனர்.

ஆனால், அதில் திடீரென திருப்பம் ஏற்பட்டது. அந்த நபரும், அவரது குடும்பத்தினரும் ரூ.25 லட்சம் பணம் மற்றும் சொகுசு கார் ஒன்றை வரதட்சணையாக தர வேண்டும் என பெண் வீட்டாரிடம் வலியுறுத்தினர்.

ஆனால், இந்த கோரிக்கைகளை பெண் வீட்டாரால் நிறைவேற்ற முடியவில்லை. இந்த சூழலில், தேர்வை காரணம் காட்டி திருமண தேதி தள்ளி வைக்கப்பட்டது.

அந்த நபர், அவருடைய சகோதரர் முறை உறவினர் என இரண்டு பேரும் ஒரு நாள் காசியாபாத்தில் உள்ள பெண்ணின் வீட்டுக்கு சென்றனர். அந்த பெண்ணுக்கு குடிக்க, மயக்க மருந்து கலந்த குளிர்பானம் கொடுத்தனர்.

அதன்பின்னர் அந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அதுபற்றிய சில ஆபாச வீடியோக்களையும் அவர்கள் பதிவு செய்து கொண்டனர்.

இந்த வீடியோவை வைரலாக்கி விடுவேன் என கூறி அந்த நபர் தொடர்ந்து, அந்த பெண்ணை மிரட்டி பாலியல் உறவுக்கு கட்டாயப்படுத்தி உள்ளார். இதில், அந்த பெண் கர்ப்பிணியானார்.

இந்த விவரம் தெரிந்ததும் அந்நபர் கருக்கலைப்பு செய்ய வற்புறுத்தினார். அதன்பின்னர், அந்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்து விட்டார்.

இதுபற்றி அந்த பெண் போலீசில் புகார் அளித்ததும், டெல்லியில் ஹாஜ் காஸ் பகுதியில் இருந்த குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். அந்நபர் மற்றும் 11 பேருக்கு எதிராக கவிநகர் காவல் நிலையத்தில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. மற்ற குற்றவாளிகளை கைது செய்யும் பணி நடந்து வருகிறது என உதவி கமிஷனர் அபிசேக் ஸ்ரீவஸ்தவ் கூறியுள்ளார்.


Next Story