சைரஸ் மிஸ்திரி கார் விபத்து: மெர்சிடஸ் ஷோரூமில் நிறுத்தப்பட்டுள்ள காரில் ஹாங்காங் நிபுணர் குழு ஆய்வு!


சைரஸ் மிஸ்திரி கார் விபத்து: மெர்சிடஸ் ஷோரூமில் நிறுத்தப்பட்டுள்ள காரில் ஹாங்காங் நிபுணர் குழு ஆய்வு!
x
தினத்தந்தி 13 Sep 2022 11:52 AM GMT (Updated: 13 Sep 2022 11:55 AM GMT)

டாடா சன்ஸ் குழும முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி சென்ற கார் விபத்துக்குள்ளானதில் செப்டம்பர் 4 ஆம் தேதி அவர் உயிரிழந்தார்.

மும்பை,

டாடா சன்ஸ் குழும முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி(54) மற்றும் அவரது நண்பர் ஜஹாங்கீர் பண்டோல் ஆகியோர் சென்ற கார் செப்டம்பர் 4 ஆம் தேதி விபத்துக்குள்ளானதில் அவர்கள் உயிரிழந்தனர்.

அவர்கள் சென்ற மெர்சிடஸ் பென்ஸ் கார் மும்பையை ஒட்டியுள்ள பால்கர் மாவட்டத்தில் சாலையில் கட்டப்பட்ட சிறிய பாலத்தின் மீது அமைக்கப்பட்டிருந்த சாலை டிவைடர் மீது மோதியது. மேலும் அந்த காரில் பயணம் செய்த அனாஹிதா பண்டோல்(55), அவரது கணவர் டேரியஸ் பண்டோல்(60) ஆகியோர் காயமடைந்து மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மிஸ்திரி மற்றும் மூன்று பேரை ஏற்றிச் சென்ற மெர்சிடஸ் காரின் பிரேக் விபத்து ஏற்படுவதற்கு ஐந்து வினாடிகளுக்கு முன்பு பலமாக மிதிக்கப்பட்டது என்று மெர்சிடஸ் கார் நிறுவனம் அளித்த முதற்கட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. போலீசின் முதற்கட்ட விசாரணையில், அதிவேகம் மற்றும் ஓட்டுநர் (அனாஹிதா பண்டோல்) செய்த தவறு ஆகியவை கார் விபத்துக்குக் காரணம் என்று தெரியவந்தது.

இந்த நிலையில், சைரஸ் மிஸ்திரியின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மற்றும் ஆய்வுக்காக ஹாங்காங்கில் இருந்து மெர்சிடஸ் நிபுணர் குழு தானேயில் உள்ள மெர்சிடஸ் ஷோரூமிற்கு இன்று சென்றடைந்தது.

முன்னதாக ஹாங்காங்கில் இருந்து மெர்சிடஸ் பென்ஸ் சொகுசு கார் நிறுவனத்தின் நிபுணர்கள் குழு திங்கள்கிழமை மும்பை வந்தது.

இது குறித்து போலிஸ் தரப்பில் கூறுகையில், ஹாங்காங்கில் இருந்து மூன்று நிபுணர்கள் கொண்ட குழு மும்பைக்கு வந்திறங்கியுள்ளது. இந்த குழுவில் உள்ள தொழில்நுட்ப வல்லுநர்கள், செவ்வாய்க்கிழமை காவல் துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆய்வுப் பணியைத் தொடங்குவார்கள்.

சாலை விபத்தில் சிக்கிய கார் தானேயில் உள்ள மெர்சிடஸ் பென்ஸ் ஷோரூம் பிரிவில் வைக்கப்பட்டுள்ளது. இந்த குழு மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனத்திடம் அறிக்கை சமர்ப்பிக்கும். கார் விபத்து பற்றிய அனைத்து தகவல்களுடன் கூடிய இறுதி அறிக்கை, இரண்டு நாட்களுக்குப் பிறகு கார் நிறுவனத்தால் காவல்துறைக்கு சமர்ப்பிக்கப்படும் என்று கூறப்பட்டது.


Next Story