சட்டசபை தேர்தலில் மந்திரி அசோக் தோல்வி அடைவார்
சாலை பள்ளங்களை மூட முடியாததால் சட்டசபை தேர்தலில் மந்திரி அசோக் தோல்வி அடைவார் என்று சித்தராமையா பதிலடி கொடுத்துள்ளார்.
பெங்களூரு
அகில இந்திய காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே இன்று (புதன்கிழமை) பதவி ஏற்க உள்ளார். இந்த பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க எதிர்க்கட்சி தலைவரான சித்தராமையா டெல்லி சென்றுள்ளர். டெல்லியில் வைத்து நேற்று சித்தராமையா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போத கூறியதாவது:-
கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி இறுதி கட்டத்தில் இருப்பதாக மந்திரி அசோக் தெரிவித்துள்ளார். பா.ஜனதாவினருக்கு அரசியல் அமைப்பு மீதோ, மக்கள் மீதோ அக்கறை கிடையாது. அசோக் வருவாய்த்துறை மந்திரியாக இருக்கிறார். பெங்களூருவில் உள்ள சாலை பள்ளங்களை மூடுவதற்கு ஐகோர்ட்டு பல முறை உத்தரவிட்டு, எச்சரிக்கையும் விடுத்தது. அப்படி இருந்தும் ஒரு சாலை பள்ளங்களை மூடுவதற்கு பா.ஜனதாவால் முடியவில்லை. இப்படிப்பட்ட பா.ஜனதாவினரிடம் இருந்து நாங்கள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டுமா?.
காங்கிரஸ் பற்றி பேசுவதற்கு அசோக்குக்கு தகுதி இல்லை. அவர் வருகிற சட்டசபை தேர்தலில் தோல்வி அடைவார். விதானசவுதாவுக்குள் அவர் வருவதற்கு வாய்ப்பில்லை. இது சவால் இல்லை. மக்களின் முடிவாகும். கர்நாடகத்தில் மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு வாய்ப்பே இல்லை. மக்கள் காங்கிரசை ஆதரிக்க தயாராகி விட்டனர். அடுத்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.