பெங்களூருவில் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க நடவடிக்கை அதிகாரிகளுக்கு மந்திரி தினேஷ் குண்டுராவ் உத்தரவு
பெங்களூருவில் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி மாநகராட்சி அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை மந்திரி தினேஷ் குண்டுராவ் உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூரு:
பெங்களூருவில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சலை தடுப்பது குறித்து சுகாதாரத்துறை மந்திரி தினேஷ் குண்டுராவ் பெங்களூருவில் நேற்று தனது துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் பெங்களூருவில் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்கும்படி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். அந்த கூட்டத்தில் தினேஷ் குண்டுராவ் பேசியதாவது:-
பெங்களூருவில் கடந்த 2 மாதங்களாக டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது. இந்த காய்ச்சலை தடுக்கும் நோக்கத்தில் சுகாதாரத்தை பராமரிக்க மருந்து தெளிக்க வேண்டும். தூய்மை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கடந்த ஜூலை மாதம் 1,649 பேரும், ஆகஸ்டில் 1,589 பேரும், இந்த மாதம் இதுவரை 416 பேரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களாக நகரில் மழை பெய்து வருவதால் தண்ணீர் தேங்கி கொசுக்கள் அதிகளவில் உற்பத்தி ஆகிறது. சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தி டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெங்களூருவில் 6 உயர்தர ஆய்வகங்கள் உள்ளன. டெங்கு காய்ச்சலை தடுப்பதற்கு தேவையான நிதி பெங்களூரு மாநகராட்சிக்கு வழங்கப்படும்.
பெங்களூருவில் சுகாதார ஆய்வாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். சுகாதார உதவியாளர்கள் நியமிக்கப்பட்டு அவர்களின் சம்பளமும் உயர்த்தப்படும். டெங்கு காய்ச்சல் பரவலை முன்கூட்டியே அறியும் வகையில் இந்திய அறிவியல் கழகம் ஒரு தொழில்நுட்பத்தை தயாரித்துள்ளது. இதனால் கொசுக்கள் உற்பத்தியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க முடியும்.
பெங்களூருவில் 50 நம்ம கிளினிக்குகள் காலை 8 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை திறக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் டாக்டா்கள், நர்சுகள் பகல் 12 மணி முதல் கிளினிக்கில் இருப்பார்கள்.
இவ்வாறு தினேஷ் குண்டுராவ் பேசினார்.
இந்த கூட்டத்தில் பெங்களூரு மாநகராட்சி கமிஷனர் துஷார் கிரிநாத், சுகாதாரத்துறை கமிஷனர் ரன்தீப் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.