டெல்லியில் மத்திய மந்திரியுடன் அமைச்சர் காந்தி சந்திப்பு
தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் காந்தி அரசுமுறை பயணமாக நேற்று முன்தினம் இரவு டெல்லி வந்தார்.
புதுடெல்லி,
தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் காந்தி அரசுமுறை பயணமாக நேற்று முன்தினம் இரவு டெல்லி வந்தார். பின்னர் நேற்று காலை அவர் மத்திய வர்த்தகம், தொழில் மற்றும் ஜவுளித்துறை மந்திரி பியூஷ்கோயலை சந்தித்து தமிழ்நாடு ஜவுளித்துறையின் பிரச்சினைகளை எடுத்துக்கூறி அதனை தீர்த்து வைக்கவேண்டி மனு அளித்தார்.
அதில், நிலையற்ற பருத்தி விலை, பருத்திக்கு 11 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள், பதனிடும் மற்றும் சாயத்தொழில் பிரச்சினைகள் போன்றவை குறிப்பிடப்பட்டு உள்ளன. மேலும், சேலத்தில் ஒருங்கிணைந்த ஜவுளிப்பூங்கா அமைப்பது குறித்தும் மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த சந்திப்பின்போது, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்துறை முதன்மைச் செயலாளர் தர்மேந்திரபிரதாப் யாதவ், துணிநூல் துறை ஆணையர் வள்ளலார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.