மக்கள் தொகை கட்டுப்பாடு மசோதாவை அமல்படுத்த வேண்டும் - மத்திய மந்திரி கிரிராஜ் சிங்
மக்கள் தொகைக் கட்டுப்பாடு மசோதாவை அமல்படுத்த வேண்டும் என்று மத்திய ஊரக வளர்ச்சித்துறை மந்திரி கிரிராஜ் சிங் வலியுறுத்தி உள்ளார்.
புதுடெல்லி,
இந்தியா அடுத்த ஆண்டில் சீனாவைப் பின்னுக்குத் தள்ளி உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக மாறிவிடும் என ஐ.நா. மக்கள் தொகை நிதியம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், மக்கள் தொகைக் கட்டுப்பாட்டு மசோதாவை அமல்படுத்த வேண்டும் என்று மத்திய ஊரக வளர்ச்சித்துறை மந்திரி கிரிராஜ் சிங் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், மக்கள்தொகை கட்டுப்பாட்டு மசோதா மிகவும் முக்கியமானது. ஏனெனில் நம்மிடம் குறைவான வளங்களே உள்ளன. மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதற்காக 'ஒரு குழந்தை கொள்கையை' சீனா அமல்படுத்தப்பட்டது. இதன் மூலம் அவர்கள் வளர்ச்சி அடைந்து உள்ளனர்.
சீனாவில் நிமிடத்திற்கு 10 குழந்தைகள் பிறக்கின்றன. ஆனால் இந்தியாவில் ஒரு நிமிடத்திற்கு 30 குழந்தைகள் பிறக்கின்றன. நாம் எப்படி சீனாவுடன் போட்டியிடுவோம்?
மக்கள்தொகைக் கட்டுப்பாட்டு மசோதா அவசியம் ஆகும். கடந்த 1978-ல் இந்தியாவை விட ஜிடிபி குறைவாக இருந்த சீனா 'ஒரு குழந்தை கொள்கையை' அமல்படுத்தி கிட்டத்தட்ட 60 கோடி மக்களை கட்டுப்படுத்தி வளர்ச்சியை அடைந்ததாக அறிக்கைகள் கூறுகின்றன."
மக்கள் தொகை கட்டுப்பாட்டு சட்டத்தை பின்பற்றாதவர்களுக்கு அரசு சலுகைகள் வழங்க கூடாது. அவர்களின் வாக்குரிமையும் திரும்ப பெறப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் 6-ந் தேதி தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.