நான் பா.ஜனதாவில் இருந்து விலக மாட்டேன் மந்திரி நாராயண கவுடா உறுதி
நான் பா.ஜனதாவில் இருந்து விலகப் போவதில்லை என்று மந்திரி நாராயண கவுடா உறுதிபட கூறினார்.
மண்டியா:-
மந்திரி நாராயண கவுடா
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜனதாவில் மந்திரியாக இருந்து வருபவர் நாராயண கவுடா. இவர் மண்டியா மாவட்டம் கே.ஆர்.பேட்டை தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்வானவர் ஆவார். இதற்கு முன்பு இவர் காங்கிரஸ் கட்சியில் அங்கம் வகித்து இருந்தார். மேலும் கடந்த 2018-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் நாராயண கவுடா காங்கிரஸ் சார்பில் கே.ஆர்.பேட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றிருந்தார்.
இந்த நிலையில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி கவிழ காரணமாக இருந்த எம்.எல்.ஏ.க்களில் நாராயண கவுடாவும் ஒருவர் ஆவார். அதன்பின்னர் தான் அவர் மீண்டும் கே.ஆர்.பேட்டை தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று மந்திரி ஆனார்.
சட்டசபை பொதுத்தேர்தல்
இந்த நிலையில் கர்நாடக சட்டசபைக்கு இன்னும் ஓரிரு மாதங்களில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. அதை கருத்தில் கொண்டு நாராயணகவுடா, பா.ஜனதாவில் இருந்து விலகி மீண்டும் காங்கிரசில் சேர திட்டமிட்டு இருப்பதாகவும், அதனால் அவருக்கே மீண்டும் கே.ஆர்.பேட்டை தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் சார்பில் டிக்கெட் கொடுக்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.
மேலும் மண்டியாவில் நடக்கும் காங்கிரஸ் நிகழ்ச்சிகள் அனைத்திலும் மந்திரி நாராயண கவுடா பங்கேற்று வருகிறார். அவருக்கு மீண்டும் பா.ஜனதா சார்பில் தேர்தலில் போட்டியிட டிக்கெட் கிடைக்காது என்றும், அப்படியே டிக்கெட் கிடைத்தாலும் மந்திரி பதவி கிடைப்பது சந்தேகம் தான் என்றும் கூறப்படுகிறது. இதன்காரணமாக அவர் காங்கிரசில் சேர முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
முட்டை வீச்சு
இந்த நிலையில் நேற்று கே.ஆர்.பேட்டை தொகுதியில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் நாராயணகவுடா காங்கிரசில் சேர்ந்தாலும், அவருக்கு தேர்தலில் போட்டியிட டிக்கெட் கொடுக்க கூடாது என்று கட்சி நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கினர். மேலும் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கங்காதருக்கு வளையல் வழங்கி, அவரது கார் மீது முட்டை வீசினர்.
இந்த நிலையில் நேற்று கே.ஆர்.பேட்டை தொகுதியில் காங்கிரஸ் கட்சியினர் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சாலையில் டயர்களை கொளுத்திப் போட்டு போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் போது அவர்கள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் எதிராக கோஷமிட்டனர். மேலும் கட்சிக்காக பாடுபடும் உண்மையான தொண்டர் ஒருவருக்கு தேர்தலில் வழங்கும்படி காங்கிரஸ் மேலிட தலைவர்களுக்கு கோரிக்கை விடுத்தனர்.
பா.ஜனதாவை விட்டு விலக மாட்டேன்
இதற்கிடையே நேற்று மந்திரி நாராயண கவுடா மண்டியாவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நான் பா.ஜனதாவில் இருந்து விலகி காங்கிரசில் சேர இருப்பதாக கூறப்படும் தகவல் உண்மைக்கு புறம்பானது. அது ஒரு பொய்யான தகவல். ஆதாரமற்ற தகவல்களை பரப்புவது தவறு. பா.ஜனதா கட்சியில் எனக்கு அனைத்து பதவிகளையும் வழங்கி உள்ளனர். அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளனர்.
எக்காரணம் கொண்டும் நான் பா.ஜனதாவைவிட்டு விலக மாட்டேன். என் வெற்றிக்கு காரணம் முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவின் மகனான விஜயேந்திராதான். வரும் தேர்தலில் அவர் போட்டியிட உள்ளார். அவர் போட்டியிட்டால் அவரது வெற்றிக்காக நான் பாடுபடுவேன். தேர்தல் சமயங்களில் இதுபோன்ற தகவல்கள் பரவுவது சகஜம். அதை பொதுமக்கள் நம்ப வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.