பெண்ணை கன்னத்தில் அறைந்த விவகாரம்: மந்திரி சோமண்ணா மன்னிப்பு கேட்டார்


பெண்ணை கன்னத்தில் அறைந்த விவகாரம்:  மந்திரி சோமண்ணா மன்னிப்பு கேட்டார்
x

பெண்ணை கன்னத்தில் அறைந்த விவகாரத்தில் மந்திரி சோமண்ணா மன்னிப்பு கேட்டார்.

பெங்களூரு: கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகா ஹங்கலா கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் பெண் ஒருவரை மந்திரி சோமண்ணா கன்னத்தில் அறைந்ததாக தெரிகிறது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் மந்திரி சோமண்ணாவுக்கு எதிராக பலர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். காங்கிரஸ் கட்சியும் அவர் பதவி விலக வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இந்த நிலையில், பெண்ணை கன்னத்தில் அறைந்த விவகாரம் தொடர்பாக மந்திரி சோமண்ணா, சாம்ராஜ்நகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

'சமுதாயத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த மக்களுக்கு நில உரிமை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நான் தவறாக நடந்துகொள்ளவில்லை. யார் மனதும் புண்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். நிகழ்ச்சி நடக்கும்போது அந்த பெண் பலமுறை மேடைக்கு வந்தார். நிகழ்ச்சி முடிந்தவுடன் பிரச்சினையை தீர்த்து வைப்பதாக கூறினேன். நான் அவரை ஒதுங்கி நிற்க வைக்க முயன்றேன். வேறு எதுவும் நான் செய்யவில்லை. நான் 40 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். பெண்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. நானும் பொருளாதார ரீதியில் நலிவடைந்த குடும்பத்தில் இருந்து வந்தவன் தான்.'

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story