மந்திரி சோமண்ணா பா.ஜனதாவை விட்டு விலக மாட்டார்


மந்திரி சோமண்ணா பா.ஜனதாவை விட்டு விலக மாட்டார்
x

வீட்டு வசதி துறை மந்திரி சோமண்ணா பா.ஜனதாவை விட்டு விலக மாட்டார் என்று முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.

பெலகாவி:-

முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா பெலகாவி மாவட்டம் சிக்கோடியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

விலக மாட்டார்கள்

வீட்டு வசதி துறை மந்திரி சோமண்ணா பா.ஜனதாவை விட்டு விலக மாட்டார். நான் பெங்களூரு சென்றதும், அவரை சந்தித்து பேசுவேன். எங்கள் கட்சியை விட்டு யாரும் செல்ல மாட்டார்கள். கட்சியில் அனைவரும் ஒற்றுமையாக உள்ளனர். காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் அனைவரிடமும் பேசுவார். அவ்வாறு சோமண்ணாவிடமும் பேசி இருப்பார். இதற்கு முக்கியத்துவம் அளிக்க தேவை இல்லை.

பா.ஜனதாவுக்கு கிடைக்கும் மக்களின் ஆதரவை கண்டு காங்கிரசாருக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. எங்கள் கட்சியை விட்டு விலகுகிறவர்களை கவுரமாக அனுப்பி வைப்போம். பிற கட்சிகளில் இருந்து வருபவர்களை மரியாதையுடன் வரவேற்க தயாராக உள்ளோம். எங்கள் கட்சிக்கு வந்த 17 எம்.எல்.ஏ.க்களில் யாரும் விலக மாட்டார்கள். கர்நாடகத்தில் மீண்டும் பா.ஜனதா ஆட்சிக்கு வரும் நிலையில் எதற்காக எங்கள் கட்சியினர் பிற கட்சிகளுக்கு செல்வார்கள்?.

தோல்வி பயம்

தோல்வி பயத்தால் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் அடிக்கடி கர்நாடகம் வருவதாக சித்தராமையா கூறியுள்ளார். அவர்கள் அடிக்கடி வந்து மக்கள் நல திட்டங்களை தொடங்கி வைப்பதால், காங்கிரசுக்கு தான் தோல்வி பயம் ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடி கர்நாடகத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறார். அதனால் அவர் அடிக்கடி இங்கு வருகிறார்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.


Next Story