காதலுக்கு எதிர்ப்பு- மைனர்பெண் தற்கொலை; காதலன் கொலை
விஜயாப்புரா அருகே காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மைனர்பெண் தற்கொலை செய்துகொண்டார். இதனால் அவரது காதலனை மைனர்பெண்ணின் தந்தை உள்பட 2 பேர் கொலை செய்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு:
மைனர்பெண் தற்கொலை
விஜயாப்புரா மாவட்டம் திகோட்டா தாலுகா கோனசகி கிராமத்தை சேர்ந்தவர் மல்லு ஜமகண்டி (வயது 21). இவர் திகோட்டாவில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார். அவர் கல்லூரிக்கு பஸ்சில் சென்று வந்த போது கல்கவடகி என்ற கிராமத்தை சேர்ந்த மைனர் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் காதலாக மாறியது. அவர்கள் 2 பேரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்து உள்ளனர். இவர்களின் காதல் விவகாரம் மைனர் பெண்ணின் வீட்டிற்கு தெரியவந்து உள்ளது.
காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மைனர் பெண்ணின் குடும்பத்தினர் மல்லுவுடனான காதலை கைவிடும்படி கூறியுள்ளனர். ஆனால் இதற்கு மைனர் பெண் மறுத்து விட்டார். இந்த நிலையில் கடந்த 22-ந் தேதி மைனர் பெண்ணின் வீட்டிற்கு சென்ற மல்லு, தனது காதலியை தனிமையில் சந்தித்து பேசி உள்ளார். இதை மைனர்பெண்ணின் தந்தையான குரப்பா பார்த்துவிட்டார். இதையடுத்து அவர் தனது மகளுக்கு அறிவுரை கூறியதாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்த மைனர் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
ஆற்றில் வீசப்பட்ட உடல்கள்
இதனால் ஆத்திரம் அடைந்த குரப்பா தனது மருமகனான அஜித் என்பவருடன் சேர்ந்து மல்லுவை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும் மல்லுவின் வாயில் வலுக்கட்டாயமாக விஷத்தை ஊற்றி 2 பேரும் சேர்ந்து கொலை செய்து உள்ளனர். பின்னர் மல்லு, மைனர் பெண்ணின் உடல்களை தனித்தனி சாக்கு மூட்டையில் கட்டி கிருஷ்ணா ஆற்றில் வீசியுள்ளனர்.
பின்னர் தனது மகளை மல்லு கடத்தி சென்றதாக திகோட்டா போலீஸ் நிலையத்தில் குரப்பா புகார் அளித்து இருந்தார். அதன்பேரில் மல்லுவையும், மைனர் பெண்ணையும் போலீசார் தேடிவந்தனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாகல்கோட்டை மாவட்டம் பீலகியில் ஓடும் கிருஷ்ணா ஆற்றில் மல்லுவின் உடல் மிதந்தது. அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
கைது-பரபரப்பு
இந்த நிலையில் சந்தேகத்தின்பேரில் மைனர் பெண்ணின் தந்தை குரப்பாவை பிடித்து பீலகி போலீசார் விசாரித்தனர். அப்போது காதல் விவகாரத்தில் மகள் தற்கொலை செய்து கொண்ட ஆத்திரத்தில் மல்லுவின் வாயில் விஷத்தை ஊற்றி கொலை செய்து பின்னர் 2 பேரின் உடல்களையும் ஆற்றில் வீசியதை குரப்பா ஒப்புக்கொண்டார்.
இதனால் குரப்பாவை போலீசார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில் அஜித்தும் கைது செய்யப்பட்டார். மல்லுவின் உடல் மட்டும் கிடைத்துள்ள நிலையில் மைனர் பெண்ணின் உடல் கிடைக்கவில்லை. அவரது உடலை போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். காதல் விவகாரத்தில் நடந்த தற்கொலை, கொலை சம்பவம் விஜயாப்புரா, பாகல்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.