பல மாதங்களாக பாலியல் வன்கொடுமை - 45 வயது நபரை கொலை செய்த 13 வயது சிறுமி


பல மாதங்களாக பாலியல் வன்கொடுமை - 45 வயது நபரை கொலை செய்த 13 வயது சிறுமி
x

பல மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்த 45 வயது நபரை 13 வயது சிறுமி கொலை செய்தார்.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டம் பிவாடி பகுதியை சேர்ந்த 45 வயதான விக்ரம் கடந்த 17-ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், போலீசார் நடத்திய விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி தான் விக்ரமை கொலை செய்தது தெரியவந்துள்ளது.

இது குறித்து போலீசார் தரப்பில் கூறுகையில், அந்த 13 வயது சிறுமி அதேபகுதியில் வசித்து வரும் ஆண் நண்பருடன் பேசி வந்துள்ளார். சில நேரங்களில் அந்த சிறுமி விக்ரமிடம் செல்போன் வாங்கி தனது ஆண் நண்பருடன் பேசியுள்ளார். இதை சாதகமாக கொண்ட விக்ரம் ஆண் நண்பருடன் பேசுவதை பெற்றோரிடம் கூறிவிடுவேன் என அந்த சிறுமியை மிரட்டியுள்ளார்.

இதனை தொடர்ந்து, அந்த சிறுமியை மிரட்டி விக்ரம் பாலியல் கொடுமை செய்துள்ளார். பின்னர், அதேகிராமத்தை சேர்ந்த விக்ரமின் 4 நண்பர்களும் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். விக்ரம் தனது நண்பர்களுடன் இணைந்து சிறுமியை கடந்த 7 மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த 17-ம் தேதி அந்த சிறுமியை விக்ரம் இரவு வீட்டிற்கு வெளியே வரும்படி கூறியுள்ளார். இதையடுத்து, வீட்டில் இருந்து வெளியே வந்த சிறுமியை மதுபோதையில் இருந்த விக்ரம் மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளார்.

தொடர் பாலியல் வன்கொடுமைகளால் ஆத்திரமடைந்த அந்த சிறுமி தான் வைத்திருந்த துப்பட்டா துணியால் மதுபோதையில் இருந்த விக்ரமின் கழுத்தை நெரித்து கொலை செய்தார். பிரேத பரிசோதனையின் போது விக்ரமின் கழுத்துப்பகுதியில் இருந்த தடையத்தை வைத்து கொலை செய்யப்பட்டதும், சிறுமி அணிந்திருந்த ஆடையின் கிழிந்த துண்டுகள் சம்பவம் நடந்த இடத்தில் கிடந்ததை வைத்து சிறுமி தான் இந்த கொலை செய்தார் என்பதை உறுதி செய்தனர். மேலும், விக்ரமை கொலை செய்ததையும் சிறுமி ஒப்புக்கொண்டனர்.

இதனை தொடர்ந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 4 பேர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story