குடும்பத்தை விட்டு பிரிந்து சென்று திருநங்கையாக மாறிய நபர் ரீல்ஸ் வீடியோ மூலம் கண்டுபிடிப்பு


குடும்பத்தை விட்டு பிரிந்து சென்று திருநங்கையாக மாறிய நபர் ரீல்ஸ் வீடியோ மூலம் கண்டுபிடிப்பு
x

திருநங்கையாக கண்டுபிடிக்கப்பட்ட நபர் மீண்டும் மனைவி, குழந்தைகளுடன் சேர்ந்து வாழ பிடிக்கவில்லை என தெரிவித்தார்.

ராமநகர்:

கர்நாடகா மாநிலம் ராமநகர் மாவட்டம் ஐசூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் லட்சுமண் ராவ். இவருக்கு கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் நடந்திருந்தது. லட்சுமண் ராவுக்கு இரட்டை குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் திடீரென்று லட்சுமண் ராவ் மாயமானார். இதுகுறித்து ஐசூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த ரீல்ஸ் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. அந்த வீடியோவில் லட்சுமண் ராவ் போன்று ஒரு திருநங்கையும் இருந்தார். அந்த வீடியோவை லட்சுமண் ராவ் குடும்பத்தினரும் பார்த்தனர்.

இதுபற்றி அவர்கள், ஐசூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் லட்சுமண் ராவ் குறித்தும், ரீல்சில் இடம் பெற்றிருந்த புகைப்படத்தில் இருக்கும் திருநங்கை குறித்தும் விசாரித்து தகவல்களை பெற்றார்கள். அப்போது அந்த ரீல்சை பதிவு செய்த ராஷ்மிகா, லட்சுமண் ராவ் தோற்றத்துடன் கூடிய திருநங்கையின் வீட்டு முகவரியை போலீசாரிடம் வழங்கினார்.

அந்த முகவரிக்கு போலீசார் சென்றபோது அதிர்ச்சி காத்திருந்தது. அந்த திருநங்கையின் பெயர் விஜயலட்சுமி என்பதும், கடந்த 7 ஆண்டுக்கு முன்பு காணாமல் போன லட்சுமண்ராவ் தான் திருநங்கையாக மாறி இருப்பதையும் கண்டுபிடித்தார்கள்.

பின்னர் விஜயலட்சுமியை (லட்சுமண்ராவ்) போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றார்கள். விஜயலட்சுமியின் குடும்பத்தினரும் அங்கு வந்தனர். அதன்பிறகு, திருநங்கையான விஜயலட்சுமியிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். மனைவி, குழந்தைகளுடன் சேர்ந்து வாழும்படி போலீசார் கேட்டுக் கொண்டனர்.

ஆனால் போலீசாரின் பேச்சையோ, குடும்பத்தினர் பேச்சையோ கேட்க அவர் மறுத்து விட்டார். எனக்கு பெண்ணுக்கான குணங்கள் தான் இருக்கின்றன. அதனால் மனைவி, குழந்தைகள் எனக்கு வேண்டாம். அவர்களுடன் சேர்ந்து வாழவும் பிடிக்கவில்லை. நான் திருநங்கையாக வாழ்வதற்கே ஆசைப்படுகிறேன் என்று திட்டவட்டமாக தெரிவித்தார். இதனால் போலீசாரின் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததுடன், குடும்பத்தினரும் மிகுந்த வேதனையும், ஏமாற்றமும் அடைந்தார்கள்.

காணாமல் போனவரை 7 ஆண்டுக்கு பின்பு கண்டுபிடித்தும், அவர் திருநங்கையாக மாறி இருப்பதால், அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் வேதனையுடன் புறப்பட்டு சென்றனர்.


Next Story