உ.பி. மாநகராட்சி தேர்தல்: அரசு எந்திரத்தை தவறாக பயன்படுத்தி பா.ஜனதா வெற்றி - மாயாவதி குற்றச்சாட்டு
உத்தரபிரதேச மாநகராட்சி தேர்தலில் அரசு எந்திரத்தை தவறாக பயன்படுத்தி பா.ஜனதா வெற்றி பெற்றதாக மாயாவதி குற்றம் சாட்டினார்.
லக்னோ,
உத்தரபிரதேசத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடந்தது. நேற்று முன்தினம் நடந்த ஓட்டு எண்ணிக்கையில், பா.ஜனதா மொத்தம் உள்ள 17 மேயர் பதவிகளையும் கைப்பற்றியது. மாநகராட்சி வார்டுகளிலும் அதிக அளவில் வெற்றி பெற்றது.
பகுஜன் சமாஜ் கட்சி, 17 மேயர் பதவிகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்தியது. இருப்பினும், ஒரு மேயர் பதவியைக் கூட கைப்பற்றவில்லை.
வாக்குச்சீட்டு
இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி இதுகுறித்து தனது 'டுவிட்டர்' பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
எதிர்மறையான சூழ்நிலையிலும், பகுஜன் சமாஜ் கட்சி மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த தேர்தல் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடந்திருந்தால், தேர்தல் முடிவுகள் வேறுமாதிரி இருந்திருக்கும். வாக்குச்சீட்டை பயன்படுத்தி தேர்தல் நடந்திருந்தால், பகுஜன் சமாஜ் கட்சி வெற்றி பெற்றிருக்கும்.
அமைதியாக இருக்கமாட்டோம்
பா.ஜனதாவோ, சமாஜ்வாடியோ யார் ஆட்சியில் இருந்தாலும் தில்லுமுல்லு செய்து அதிக இடங்களில் வெற்றி பெற்று விடுகிறார்கள். இந்த தேர்தலும் அதற்கு விதிவிலக்கு அல்ல. இது பெரும் கவலைக்குரியது.
பா.ஜனதா தனது வெற்றிக்காக சாம, பேத, தான, தண்ட வழிமுறைகளை கையாண்டது. அரசு எந்திரத்தை தவறாக பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ளது. நேரம் வரும்போது, அதற்கான பின்விளைவுகளை நிச்சயம் சந்திக்கும்.
இப்பிரச்சினையில், பகுஜன் சமாஜ் கட்சி அமைதியாக இருக்காது என்று அவர் கூறியுள்ளார்.