பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மிசோரமில் இன்று வாக்கு எண்ணிக்கை


பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மிசோரமில் இன்று வாக்கு எண்ணிக்கை
x

கோப்புப்படம்

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்காரில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றது. தெலுங்கானாவை காங்கிரஸ் கைப்பற்றியது.

அய்ஸ்வால்,

5 மாநிலங்களின் சட்டசபைகளுக்கு கடந்த அக்டோபர் 9-ந்தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதன்படி 40 தொகுதிகளை கொண்ட மிசோரம் மாநில சட்டசபைக்கு கடந்த 7-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இதில் 80 சதவீத வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.

ராஜஸ்தான், சத்தீஷ்கார், மத்திய பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களுடன் சேர்த்து மிசோரமிலும் நேற்று வாக்கு எண்ணிக்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் மிசோரமில் ஞாயிற்றுக்கிழமை அன்று தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடைபெறும் என்பதால் வாக்கு எண்ணிக்கையை வேறு தேதிக்கு மாற்றுமாறு தேர்தல் ஆணையத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் வந்தன. இதனால் மிசோரமில் 4-ந் தேதி வாக்கு எண்ணிக்கை மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதன்படி இன்று (திங்கட்கிழமை) மிசோரமில் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் 13 மையங்களிலும் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என மாநில கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி ஹெச் லியான்செலா தெரிவித்தார்.

முன்னதாக நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார் மாநிலங்களில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றது. தெலுங்கானா மாநிலத்தை காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது.


Next Story