பெங்களூருவில் நவீன தீயணைப்பு வாகனத்தின் சேவை; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தொடங்கி வைத்தார்
தீயணைப்புத்துறையில் நவீன தீயணைப்பு வாகனத்தின் சேவையை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தொடங்கி வைத்தார்.
பெங்களூரு:
அடுக்குமாடி கட்டிடம்
கர்நாடக மாநில தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் துறை சார்பில் 90 மீட்டர் உயர நவீன ஏணியுடன் அமரும் வசதி கொண்ட தீயணைப்பு வாகனத்தின் சேவை தொடக்க விழா பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு, அந்த வாகனங்களின் சேவையை தொடங்கி வைத்தார். அந்த ஏணியின் உச்சத்தில் இருக்கும் தரை பகுதியில் பசவராஜ் பொம்மை, போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா உள்ளிட்டோர் அமர்ந்தனர். அது கிரேன் மூலம் உயரத்திற்கு எடுத்து சென்றது. அதன் பின்னர் அவை கீழே இறக்கப்பட்டது. பிறகு அவர் பேசியதாவது:-
இந்தியாவில் மும்பைக்கு அடுத்தபடியாக கர்நாடகத்தில் தான் இத்தகைய நவீன தீயணைப்பு வாகனம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதன் மூலம் தீவிபத்துகளில் சிக்கும் மக்களை காப்பாற்ற முடியும். நகரில் பெரிய அளவில் அடுக்குமாடி கட்டிடம் கட்டப்படும். தீவிபத்துகளை தடுக்க இந்த நவீன வாகனங்கள் பயன்படும். அந்த ஏணியில் நான் உயரத்திற்கு சென்று வந்தேன். விதான சவுதாவின் உயரத்தில் இருக்கும் கட்டிட கலையை கண்டு வியப்படைந்தேன்.
நவீன வாகனங்கள்
அந்த காலத்தில் எவ்வளவு சிரமப்பட்டு மேல் மாடியில் கோபுரத்தை வைத்திருப்பார்கள். அசோக கம்பத்தை அருகில் பார்த்தது மகிழ்ச்சி அளிக்கிறது. தீவிபத்துகள் ஏற்படும்போது மக்களை காப்பாற்ற இந்த நவீன வாகனங்கள் உதவும். இரு திருப்பதி அளிப்பதாக உள்ளது.
இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.