விவசாயிகளின் குரலை ஒடுக்க முயல்கிறது மோடி அரசு - மல்லிகார்ஜுன கார்கே கண்டனம்


விவசாயிகளின் குரலை ஒடுக்க முயல்கிறது மோடி அரசு - மல்லிகார்ஜுன கார்கே  கண்டனம்
x

பஞ்சாபில் இருந்து விவசாயிகள் 'டெல்லி சலோ' அணிவகுப்பை தற்போது தொடங்கி உள்ளனர்.

புதுடெல்லி,

கடந்த 2020-ம் ஆண்டு, 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தை தொடங்கினர். ஓராண்டுக்கு மேல் நீடித்த போராட்டத்தின் இறுதியில், வேளாண் விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதிப்படுத்த சட்டம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

ஆனால், 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்று, சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய விவசாய அமைப்புகள் இன்று டெல்லி நோக்கி பேரணி நடத்த அழைப்பு விடுத்திருந்தன.

இந்நிலையில் பஞ்சாபில் இருந்து விவசாயிகள் 'டெல்லி சலோ' அணிவகுப்பை தற்போது தொடங்கி உள்ளனர். பஞ்சாப் மாநிலம் பதேகர் சாஹிப் பகுதியில் இருந்து டிராக்டர் பேரணி தொடங்கி உள்ளது.

இந்த நிலையில் விவசாயிகளின் குரலை மோடி அரசு ஒடுக்க முயல்கிறது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ,

முள்வேலி, டிரோன்களில் இருந்து கண்ணீர் புகை, ஆணிகள் மற்றும் துப்பாக்கிகள்... எல்லாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சர்வாதிகார மோடி அரசு விவசாயிகளின் குரலை ஒடுக்க முயல்கிறது.

விவசாயிகளை 'ஒட்டுண்ணி' என்று அழைத்து அவதூறு செய்ததையும், 750 விவசாயிகள் உயிரிழந்ததையும் நினைவில் கொள்க.

10 ஆண்டுகளில், விவசாயிகளுக்கு அளித்த மூன்று வாக்குறுதிகளை மோடி அரசு நிறைவேற்றவில்லை.

2022க்குள் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குதல், சுவாமிநாதன் அறிக்கையின்படி 50 சதவிகிதம் சேர்த்து இடுபொருள் செலவுகளைச் செயல்படுத்துதல் மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட அந்தஸ்து வழங்குதல் ஆகியவை ஆகும்.

இப்போது 62 கோடி விவசாயிகளின் குரல் எழுப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது. சத்தீஸ்கர் மாநிலம் அம்பிகாபூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு நீதிக்கான குரலை காங்கிரஸ் எழுப்பும் . நாங்கள் பயப்பட மாட்டோம், தலைவணங்க மாட்டோம்,என தெரிவித்துள்ளார்.


Next Story