பரபரப்பான அரசியல் சூழலில் மூத்த மந்திரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை
பரபரப்பான அரசியல் சூழலில் பிரதமர் மோடி இன்று (திங்கட்கிழமை) மூத்த மந்திரிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.
புதுடெல்லி,
இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் 5 மாநில சட்டசபை தேர்தல்கள் மற்றும் அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலை முன்வைத்து மத்தியில் ஆளும் பா.ஜனதா தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
சட்டசபை தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் கட்சியின் அமைப்புகளில் மாற்றங்களை ஏற்படுத்த கட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தொடர்பாக கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் கட்சி தலைவர் ஜே.பி.நட்டா சமீபத்தில் ஆலோசனைகளை மேற்கொண்டார்.
மறுபுறம் பிரதமர் மோடியும் கட்சியின் உயர்மட்ட தலைவர்களை சமீபத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். குறிப்பாக, ஜே.பி.நட்டா மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்டோருடன் கடந்த 28-ந் தேதி அவர் அடுத்தடுத்து உயர்மட்ட ஆலோசனைகளை நடத்தினார்.
மராட்டிய அரசியல் திருப்பம்
இதைத்தொடர்ந்து மத்திய மந்திரிசபையில் மாற்றம் வரலாம் என தகவல்கள் வெளியாகின. குறிப்பாக சட்டசபை தேர்தல்கள் மற்றும் நாடாளுமன்ற தேர்தலை முன்வைத்து கூட்டணி கட்சிகளுக்கு மத்திய மந்திரிசபையில் இடம் வழங்க பா.ஜனதா முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே மராட்டிய அரசியலில் நேற்று மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் தலைமையில் பல எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதா கூட்டணி அரசில் இணைந்து கொண்டனர்.
மந்திரிசபை மாற்றம்
இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில், மூத்த மத்திய மந்திரிகளுடன் பிரதமர் மோடி இன்று (திங்கட்கிழமை) டெல்லியில் ஆலோசனை நடத்துகிறார். செப்டம்பர் மாதம் ஜி20 மாநாடு நடைபெற இருக்கும் பிரகதி மைதானத்தில் உள்ள மாநாட்டு அரங்கில் இந்த கூட்டம் நடக்கிறது. இதில் மந்திரி சபை மாற்றம் குறித்து விவாதிக்கப்படலாம் என தெரிகிறது.
அவ்வாறு மந்திரிசபை மாற்றியமைக்கப்பட்டால், பல்வேறு கூட்டணி கட்சிகள் மத்திய அரசில் இடம்பிடிக்கும் என தகவல் வெளியாகி இருக்கிறது. குறிப்பாக அஜித்பவாருடன் நேற்று பா.ஜனதா கூட்டணியில் இணைந்துள்ள தேசியவாத காங்கிரசின் முன்னணி தலைவர்களில் ஒருவரான பிரபுல் படேலுக்கு மத்திய மந்திரிசபையில் இடம் கிடைக்கும் என கூறப்படுகிறது.
நாடாளுமன்ற கூட்டத்தொடர்
இதைப்போல மராட்டியத்தில் அஜித் பவார் துணை முதல்-மந்திரியாகி இருப்பதால், ஏற்கனவே அங்கு துணை முதல்-மந்திரியாக இருக்கும் முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசும் மத்திய அரசுக்கு அழைக்கப்படலாம் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 20-ந் தேதி தொடங்க இருக்கும் நிலையில், அதில் கடைப்பிடிக்க வேண்டிய அரசின் நிலைப்பாடுகள் குறித்தும் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தெரிகிறது.