ஜோ பைடனின் அழைப்பை ஏற்று மோடி நாளை அமெரிக்கா செல்கிறார்


ஜோ பைடனின் அழைப்பை ஏற்று மோடி நாளை அமெரிக்கா செல்கிறார்
x

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் அழைப்பை ஏற்று அரசு முறை பயணமாக பிரதமர் மோடி நாளை (செவ்வாய்க்கிழமை) அமெரிக்காவுக்கு புறப்பட்டு செல்கிறார்.

புதுடெல்லி,

பிரதமர் மோடி, இந்த வாரம் மேற்கொள்கிற அமெரிக்க சுற்றுப்பயணம், இதுவரை இல்லாத வகையில் உலக அரங்கில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

முதல் அரசு முறை பயணம்

இதற்கு முன்பாக சாதாரண முறையில் அமெரிக்கா சென்று வந்த பிரதமர் மோடி, இந்த முறைதான் அந்த நாட்டின் ஜனாதிபதி ஜோ பைடன், அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோரின் அழைப்பின்பேரில் 21-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை அங்கு அரசுமுறை பயணம் மேற்கொள்கிறார்.

ஜோ பைடன் அமெரிக்க ஜனாதிபதி பதவி ஏற்ற பின்னர், அரசுமுறை பயணம் மேற்கொள்வதற்கு அழைப்பு விடுத்துள்ள 3-வது உலக தலைவர் பிரதமர் மோடி ஆவார். இதற்கு முன்பு அவர் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோல் ஆகியோரை அமெரிக்காவுக்கு அரசுமுறை பயணமாக அழைத்து அவர்கள் சென்று வந்தனர்.

நியூயார்க்கில் யோகா தினம்

பிரதமர் மோடி, தனது அமெரிக்க பயணத்துக்காக நாளை 20-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) டெல்லியில் இருந்து தனி விமானத்தில் நியூயார்க் நகருக்கு புறப்பட்டுச் செல்கிறார். அங்கு 21-ந் தேதியன்று ஐ.நா. தலைமையகத்தில் நடக்கிற சர்வதேச யோகா தின கொண்டாட்டத்துக்கு அவர் தலைமை தாங்கி சிறப்பிக்கிறார்.

இந்த விழாவில் பிரபல ஹாலிவுட் நடிகையும், பாடகியுமான மேரி மில்பென் கலந்து கொண்டு பாட இருக்கிறார். இவர், டெல்லியில் நடைபெற்ற இந்தியாவின் 74-வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு, நமது தேசிய கீதமான 'ஜனகணமன' பாடலை பாடி அசத்தியவர் ஆவார்.

எதிர்பார்ப்பும், பரபரப்பும்

இது குறித்து மேரி மில்பென் கூறும்போது, "அமெரிக்காவில் நியூயார்க் நகரில் ஐ.நா.சபை தலைமையகத்தில் நடக்கிற முதல் நிகழச்சியில் பிரதமர் மோடியை வரவேற்க ஐ.நா. பொதுச்சபை தலைவர் கசாபா கொரோசி மற்றும் ஐ.நா.வுக்கான இந்திய தூதர் ருசித்ரா கம்போஜ், நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் ஆகியோருடன் நானும் இணையக்காத்திருக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், "அடுத்த வாரம் பிரதமர் மோடி அமெரிக்கா வர உள்ளதால் பெரும் எதிர்பார்ப்பும், பரபரப்பும் நிலவுகிறது. அவரது வருகை, உலகின் 2 பெரிய ஜனநாயக நாடுகளாக இருந்து கொண்டு, இன்று உலகின் மிக முக்கியமான உறவாக அமைந்துள்ள அமெரிக்க-இந்திய உறவைக் கொண்டாடுவதாக அமையும்" எனவும் கூறி உள்ளார்.

பைடனுடன் பேச்சுவார்த்தை

அதைத்தொடர்ந்து பிரதமர் மோடி, தலைநகர் வாஷிங்டன் புறப்படுகிறார். அங்கு 22-ந் தேதி அவருக்கு வெள்ளை மாளிகையில் அணிவகுப்பு மரியாதையுடன் கூடிய சம்பிரதாயபூர்வ வரவேற்பு அளிக்கப்படுகிறது.

அதைத்தொடர்ந்து ஜனாதிபதி ஜோ பைடனுடன் பிரதமர் மோடி இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்த பேச்சுவார்த்தையின்போது இரு தரப்பு உறவினை புதிய உச்சத்துக்கு எடுத்துச்செல்லுதல், ராணுவ ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துதல், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட தொழில் நுட்பங்களில் ஒத்துழைத்தல், எரிசக்தி, காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் கலந்து பேசுவார்கள். ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விருந்து

அன்று இரவு பிரதமர் மோடிக்கு ஜனாதிபதி ஜோ பைடனும், அவரது மனைவி ஜில் பைடனும் சிறப்பு இரவு விருந்து அளித்து கவுரவிக்கிறார்கள்.

மேலும், நாடாளுமன்ற கீழ்சபை (பிரதிநிதிகள் சபை) சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி, மேல்சபை (செனட் சபை) ஜனநாயக கட்சி தலைவர் சுக் சூமர் ஆகியோரின் அழைப்பினை ஏற்று, அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகிறார். அப்போது இரு தரப்பு உறவின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தி கூறுவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

2016-ம் ஆண்டும், பிரதமர் மோடி அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசி இருக்கிறார். இது, அமெரிக்கா தனது நெருங்கிய நட்பு நாடுகளின் தலைவர்களுக்கு வழங்கக்கூடிய கவுரவம் ஆகும்.

கமலா ஹாரீஸ்

23-ந் தேதி துணை ஜனாதிபதி கமலா ஹாரீசும், வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கனும் இணைந்து பிரதமர் மோடிக்கு மதிய விருந்து அளித்து கவுரவிக்கிறார்கள்.

பிரதமர் மோடி வாஷிங்டன் நகரில் இருக்கிறபோது, அமெரிக்க முன்னணி தொழில் நிறுவனங்களின் தலைவர்களையும் சந்தித்து பேச உள்ளார். அப்போது இந்தியாவில் அவர்களை தொழில் தொடங்கவும்,உள்கட்டமைப்பு திட்டங்களில் முதலீடுகள் செய்யவும் அழைப்பு விடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடிக்கு 2014-ம் ஆண்டு நியூயார்க் மேடிசன் சதுக்கத்திலும், 2019-ம் ஆண்டு ஹூஸ்டன் நகரிலும் அளித்தது போன்ற பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சியை சிகாகோவில் சிப்பாய் கள அரங்கத்தில் நடத்த அமெரிக்க வாழ் இந்திய சமூகம் ஏற்பாடு செய்ய விரும்பியது. ஆனால் பிரதமர் மோடியின் நெருக்கடியான நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் அதற்கு வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது, அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க வாழ் இந்தியர்களுடன் சந்திப்பு

இருப்பினும் வாஷிங்டனில் இருந்து பிரதமர் மோடி புறப்படுவதற்கு முன்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட 1000 அமெரிக்க வாழ் இந்தியர்களை 23-ந் தேதியன்று, வாஷிங்டன் ரொனால்டு ரீகன் கட்டிடத்தில் சந்தித்து பேசுகிறார். இதற்காக அவர் வாஷிங்டனில் இருந்து தனது எகிப்து புறப்பாட்டை சில மணி நேரம் ஒத்தி போட்டுள்ளார்,

இந்த நிகழ்ச்சியிலும் ஹாலிவுட் நடிகையும், பாடகியுமான மேரி மில்பென் கலந்து கொண்டு பாடி சிறப்பிக்கிறார்.

இந்த தகவலை அமெரிக்க வாழ் இந்திய சமூக அறக்கட்டளை தலைவர் பரத் பராய் தெரிவித்துள்ளார்.

எகிப்து பயணம்

அமெரிக்க நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி 24, 25-ந் தேதிகளில் எகிப்து நாட்டில் முதல் முறையாக சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

அந்த நாட்டின் அதிபர் அப்தெல் பட்டா எல் சிசியின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி மேற்கொள்கிற அரசுமுறை பயணம் இது ஆகும்.

அங்கு தலைநகர் கெய்ரோவில் அதிபர் எல்சிசியுடன் அவர் இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துகிறார். எகிப்து வாழ் இந்தியர்களையும் பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளார்.

எகிப்து அதிபர் எல்சிசி கடந்த ஜனவரி மாதம் இந்தியா வந்தபோது இரு தரப்பு ராணுவ உறவை இன்னும் வலுப்படுத்த ஒப்புக்கொண்டிருந்தார். எனவே அவருடன் பிரதமர் மோடி நடத்துகிற பேச்சுவார்த்தையில் ராணுவ ஒத்துழைப்பு முக்கிய இடம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.


Related Tags :
Next Story