'வாட்டர் ஹீட்டரை' பயன்படுத்தியபோது மின்சாரம் தாக்கி தாய்-மகன் பலி
‘வாட்டர் ஹீட்டரை’ பயன்படுத்தியபோது மின்சாரம் தாக்கி தாய்-மகன் உயிரிழந்தனர்.
ஒசகோட்டை:
பெங்களூரு புறநகர் மாவட்டம் ஒசகோட்டை தாலுகா கனகநகர் பகுதியில் வசித்து வந்தவர் ஜோதி. ராய்ச்சூரை சேர்ந்த இவர் தனது கணவருடன் அந்த பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். இந்த தம்பதியின் மகன் ஜெயானந்த் (வயது 4). இந்த நிலையில் நேற்று முன்தினம் ஜெயானந்த் மகன் குளியல் அறைக்கு சென்றான். அப்போது அங்கிருந்த 'வாட்டர் ஹீட்டரை' சிறுவன் தவறுதலாக ஆன் செய்துள்ளான். அப்போது சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதனால் ஜெயானந்த் அலறினான். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஜோதி, விரைந்து வந்து மகனை காப்பாற்ற முயன்றார். அப்போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் தாய்-மகன் 2 பேரும் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஒசகோட்டை போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் மின் இணைப்பை துண்டித்து 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மின்சாரம் தாக்கி தாய்-மகன் உயிரிழந்த சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.