3 குழந்தைகளின் தாய் 10ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி... ஊக்கம் தரும் பேட்டி


3 குழந்தைகளின் தாய் 10ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி... ஊக்கம் தரும் பேட்டி
x

அசாமில் 22 ஆண்டுகளுக்கு முன் படிப்பை கைவிட்ட 3 குழந்தைகளின் தாய் 10ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.



கவுகாத்தி,



அசாமின் விஸ்வநாத் மாவட்டத்தில் வசித்து வருபவர் புல்புலி கட்டூன் (வயது 45). 3 குழந்தைகளுக்கு தாயான இவர், கடந்த 12 ஆண்டுகளாக அங்கன்வாடி பணியாளராக இருந்து வருகிறார். 22 ஆண்டுகளுக்கு முன் புல்புலி தனது குடும்ப சூழ்நிலையால் படிப்பை கைவிட வேண்டி இருந்தது.

அதன்பின் காலங்கள் ஓட திருமணம் முடிந்து 3 குழந்தைகளுக்கு தாயானார். ஆனால், அவரது கல்வி தாகம் தணியவில்லை. இதன் தொடர்ச்சியாக 10ம் வகுப்பு வாரிய தேர்வை பக்ருதீன் அலி அகமது உயர்நிலை பள்ளி வழியே எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார்.

இதுபற்றி புல்புலி கூறும்போது, என்னுடைய கனவு நனவானதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைந்துள்ளேன். நான் மெட்ரிக் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என எப்போதும் விருப்பத்துடன் இருந்தேன். ஆனால், குடும்பத்தில் நிலவிய சில காரணங்களால் அதனை மேற்கொள்ள முடியவில்லை.

எனக்கு திருமணம் முடிந்த பின்னர், குடும்ப பொறுப்புகளை கவனிக்க வேண்டியிருந்தது. குழந்தைகளை வளர்க்க வேண்டிய பொறுப்பும் இருந்தது. வேலைக்கும் செல்ல தொடங்கினேன். எனினும், என்றேனும் ஒரு நாள் மெட்ரிக் தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்ற கனவு எனக்குள் இருந்தது.

அதனால், எனக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் படிக்கும் வழக்கம் வைத்திருந்தேன் என கூறியுள்ளார். தொடர்ந்து படிப்பை தொடர விரும்பும் அவர், மேனிலை பள்ளியில் கலை பிரிவில் கல்வி கற்க திட்டமிட்டு உள்ளார்.

நடுத்தர வயதில், இதேபோன்ற சூழ்நிலையில் உள்ள பலருக்கும் ஊக்கம் ஏற்படுத்தும் வகையில் புல்புலி இருந்து வருகிறார். இதுபற்றி அவர் கூறும்போது, தங்களது வேலைக்கு இடையே நேரம் எடுத்து கொண்டு, படியுங்கள் என மற்றவர்களுக்கு கூறி கொள்ள விரும்புகிறேன்.

வயது ஒரு தடையாக இருக்க அவர்கள் விட்டு விட கூடாது. தங்களுடைய மனதில் இருந்து செய்ய விரும்பிவிட்டால், ஒவ்வொரு விசயமும் சாத்தியப்படும் என்று அவர் அறிவுரை வழங்கியுள்ளார்.

நான் 22 ஆண்டு இடைவெளிக்கு பின்னர் இதனை செய்ய முடிந்துள்ளது. அதனால், கல்வி கற்று தேர்ச்சி பெற விரும்பி, ஆனால் நேரம் இல்லை என கூறி அதனை செய்யாமல் இருப்பவர்கள் அதற்காக வெட்கப்பட வேண்டும் என கூறியுள்ளார்.


Next Story