விளைநிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சும் தகராறில் தாய்-மகன் படுகொலை
பாண்டவபுரா தாலுகாவில் விளைநிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சும் தகராறில் தாயும், மகனும் படுகொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக விவசாயி ஒருவர் போலீசில் சரண் அடைந்தார்.
மண்டியா:-
விளை நிலத்திற்கு தண்ணீர்...
மண்டியா மாவட்டம் பாண்டவபுரா தாலுகா ஹெக்கடஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் மாயிகவுடா. இவருக்கு சங்கரே கவுடா மற்றும் சதீஷ் கவுடா என 2 மகன்கள். விவசாயிகளான இவர்கள் இருவரும் ஒரே மோட்டாரைக் கொண்டு தங்களுடைய விளை நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சி வந்தனர்.
இதற்கு சங்கரேகவுடாவின் மனைவி சாந்தம்மா(வயது 45) எதிர்ப்பு தெரிவித்து வந்தார். நேற்று முன்தினம் சதீஷ் கவுடாவுக்கும், சாந்தம்மாவுக்கும் இடையே நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதில் தகராறு ஏற்பட்டது.
உயிரிழப்பு
இதில் ஆத்திரம் அடைந்த சதீஷ் கவுடா, மோட்டார் அறையில் கிடந்த உருட்டு கட்டையை எடுத்து சாந்தம்மாவை தாக்கினார். அதை தடுக்க வந்த சாந்தம்மாவின் மகன் யஷ்வந்த்(17) என்பவரையும் சதீஷ் கவுடா உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த இருவரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதையடுத்து சதீஷ் கவுடா மேல்கோட்டை போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். மேலும் போலீசாரிடம் அவர் விவரங்களை கூறினார்.
பரபரப்பு
அதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாந்தம்மா மற்றும் யஷ்வந்தின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த இரட்டை கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.