இந்தியாவில் இல்லாமல் வேறு எங்கு சென்று மாணவர்கள் அனுமன் மந்திரம் பாடுவார்கள் - ம.பி. மந்திரி
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்க இந்து மத கடவுள் அனுமன் மந்திரம் பாடினர்.
போபால்,
மத்தியபிரதேச மாநிலம் சிஹொர் மாவட்டத்தில் தனியார் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியின் விடுதியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை என கூறி கடந்த சில நாட்களுக்கு முன் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, தங்கள் கோரிக்கை தொடர்பாக கல்லூரி நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்க போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் இந்து மத கடவுள் அனுமனின் மந்திரங்களை கூறி போராடினர். இதையடுத்து, இந்து மத கடவுள் அனுமனின் மந்திரங்களை கூறி போராட்டத்தில் ஈடுபட்ட 7 மாணவர்களுக்கு கல்லூரி நிர்வாகம் அபராதம் விதித்தது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக அம்மாநில உள்துறை மந்திரி நரோட்டம் மிஸ்ரா கூறுகையில், அனுமன் மந்திரம் பாடியதற்காக தனியார் கல்லூரி மாணவர்கள் யாருக்கும் அபராதம் விதிக்கப்படாது. இந்த விவகாரம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்த மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தியாவில் இல்லையென்றால் மாணவர்கள் எங்கு அனுமன் மந்திரம் பாடுவார்கள்?
அனுமன் மந்திரம் பாடியதற்காக மாணவர்கள் யாருக்கும் அபராதம் விதிக்கக்கூடாது என நான் அந்த கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் அனுப்பியுள்ளேன். மாணவர்களுக்கு அறிவுரை வழங்கப்படும். ஆனால், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது' என்றார்.