சட்டசபை தேர்தலை புறக்கணிப்பதாக முஜேகான் கிராம மக்கள் அறிவிப்பு
குண்டும், குழியுமான சாலையை சீரமைக்காததால் சட்டசபை தேர்தலை புறக்கணிப்பதாக முஜேகான் கிராம மக்கள் அறிவித்து உள்ளனர்.
சிக்கமகளூரு-
சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகாவில் முஜேகான் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் இருந்து மூடிகெரே செல்லும் சாலை மிகவும் மோசமாக சேதடைந்துள்ளது. மேலும் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்தப்பகுதி மக்கள் வாகனங்களில் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகிறார்கள். மேலும், சாலை மோசமாக சேதடைந்துள்ளதால் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் கூட கிராமங்களுக்கு வருவது இல்லை என தெரிகிறது. இதனால் அந்தப்பகுதி சாலையை சீரமைக்க வேண்டும் என்று கிராம பஞ்சாயத்து அதிகாரிகள், தாசில்தார் மற்றும் மக்கள் பிரதிநிதிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் இதுவரை அந்த சாலை சீரமைக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்துள்ள முஜேகான் கிராம மக்கள், குண்டும், குழியுமான சாலையை சீரமைக்காததால் சட்டசபை தேர்தலில் வாக்களிக்காமல் புறக்கணிப்போம் என்று அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் பேனரும் வைத்துள்ளனர்.