முலாயம் சிங் யாதவ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்
முலாயம் சிங் யாதவ் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
லக்னோ
உத்தரபிரதேசத்தின் பிரதான கட்சிகளில் ஒன்றான சமாஜ்வாடியை நிறுவியவர் முலாயம் சிங் யாதவ். மாநிலத்தில் 3 முறை முதல்-மந்திரியா கவும் இருந்த அவர், கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறை வால் அவதிப்பட்டு வந்தார்.
வயது முதிர்வு காரணமாக பல்வேறு நோய்களால் அவதிப்பட்ட அவர் கடந்த 2-ந்தேதி அரியானாவின் குருகிராமில் உள்ள மெதந்தா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கவலைக்கிடமான முறையிலேயே சிகிச்சை பெற்று வந்தார்.
அவரது உடல்நிலை நேற்று முன்தினம் மிகவும் மோசமடைந்தது. எனவே உயிர் காக்கும் கருவிகள் துணை கொண்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. முலாயமின் உயிரை காக்க டாக்டர்கள் கடுமையாக போராடினர்.
ஆனால் தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் நேற்று காலை 8.16 மணியளவில் முலாயம் சிங் யாதவ் காலமானார். அவருக்கு வயது 82.
முலாயம் சிங் யாதவின் மரண செய்தியை அவரது மகனும், மாநில முன்னாள் முதல்-மந்திரியுமானஅகிலேஷ் யாதவ் தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டார். அதில் அவர், 'எனது தந்தையும், அனைவரின் நேதாஜியுமான (தலைவர்) முலாயம் சிங் யாதவ் காலமாகி விட்டார்' என குறிப்பிட்டு இருந்தார்.
இதைத்தொடர்ந்து ஏராளமான அரசியல் கட்சித்தலைவர்கள், சமாஜ்வாடி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று மறைந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதில் முக்கியமாக, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மெதந்தா ஆஸ்பத்திரிக்கு சென்று முலாயம் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இதைப்போல காங்கிரஸ் தலைவர் ராஜீவ் சுக்லா,ஐக்கிய ஜனதாதள தலைவர் கே.சி.தியாகி உள்ளிட்ட தலைவர்களும் ஆஸ்பத்திரிக்கு நேரிலேயே சென்று முலாயம் சிங் யாதவுக்கு அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் முலாயம் சிங் யாதவின் உடல் ஆஸ்பத்திரியில் இருந்து அவரது சொந்த ஊரான உத்தரபிரதேசத்தின் இடாவா மாவட்டத்துக்கு உட்பட்ட சைபாய் கிராமத்துக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது
அஞ்சலிக்காக வைக்கப்பட்ட அவரின் உடல், நுமாய்ஷ் மைதானத்திலிருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு முழு அரசு மரியாதைக்கு பின் தகனம் செய்யப்பட்டது.
இறுதிச் சடங்கில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிகார் துணை முதல் மந்திரி தேஜஸ்வி யாதவ், காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல் மந்திரி பூபேஷ் பாகல், பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன், அவரது தயாரும் சமாஜவாதி எம்.பி.யுமான ஜெயா பச்சன் பங்கேற்றனர்.
தி.மு.க. சார்பில் கட்சியின் பொருளாளரும் எம்.பி.யுமான டி.ஆர்.பாலு மற்றும் இளைஞரணி செயலாரும் எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றனர்.