ரூ.52 ஆயிரம் கோடி மும்பை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்


ரூ.52 ஆயிரம் கோடி மும்பை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்
x

ரூ.52 ஆயிரம் கோடி மும்பை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. கடற்கரை சாலை திட்டத்துக்கு ரூ.3 ஆயிரத்து 545 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மும்பை,

மும்பை மாநகராட்சி நாட்டின் பணக்கார உள்ளாட்சி நிர்வாகம் ஆகும். பல சிறிய மாநிலங்களின் பட்ஜெட்டை விட மும்பை மாநகராட்சியின் பட்ஜெட் அதிகம். 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் நேற்று சி.எஸ்.எம்.டி.யில் உள்ள மாநகராட்சி தலைமையகத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மாநகராட்சி கூடுதல் கமிஷனர் வேல்ராசு ரூ.52 ஆயிரத்து 619.07 கோடி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மாநகராட்சி கமிஷனர் இக்பால் சகால் பட்ஜெட்டை பெற்றுக்கொண்டார்.

மும்பையில் கடந்த 1985-ம் ஆண்டு கவுன்சிலர்களின் பதவிக்காலம் முடிந்தநிலையில், நிலைக்குழு ஒப்புதல் இல்லாமல் கூடுதல் கமிஷனர் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன்பிறகு தற்போது மும்பை மாநகராட்சி பட்ஜெட் நிர்வாக அதிகாரியால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2023-24 ஆம் ஆண்டு ரூ.52 ஆயிரத்து 619 கோடிக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 14.52 சதவீதம் அதிகம் ஆகும். கடந்த ஆண்டு ரூ.45 ஆயிரத்து 949.21 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

மும்பை மாநகராட்சி வரலாற்றில், ரூ.50 ஆயிரம் கோடிக்கு மேல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். பட்ஜெட்டில் மூலதன செலவுகளுக்காக ரூ.27 ஆயிரத்து 247.80 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வருவாய் செலவினங்களுக்கு ரூ.25 ஆயிரத்து 305.94 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் 52 சதவீதம் மூலதன செலவினங்களுக்கு ஒதுக்கப்படுவதும் இதுவே முதல் முறையாகும்.

பட்ஜெட்டில் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு முக்கியதுவம் வழங்கப்பட்டுள்ளது. வேகமாக நடந்து வரும் மும்பை கடற்கரை சாலை திட்டப்பணிகளுக்கு ரூ.3 ஆயிரத்து 545 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடற்கரை சாலை திட்டப்பணிகள் இந்த ஆண்டுக்குள் முடிக்கப்பட உள்ளது. கோரேகாவ் - முல்லுண்டு லிங் ரோடு திட்டத்துக்கு ரூ.1,060 கோடியும், சாலை, ேபாக்கவரத்தை மேம்படுத்தும் திட்டங்களுக்கு ரூ.2 ஆயிரத்து 825 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தண்ணீர் சுத்திகரிப்பு திட்டங்களுக்கு ரூ.2 ஆயிரத்து 795 கோடியும், வெள்ளநீர் வடிகால் திட்டங்களுக்கு ரூ.2 ஆயிரத்து 570 கோடியும், நீர் வினியோக திட்டங்களுக்கு ரூ.2 ஆயிரத்து 156 கோடியும், திடக்கழிவு மேலாண்மைக்கு ரூ.417.61 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள மாநகராட்சி பள்ளிகளை சீரமைக்க ரூ.320 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.


Next Story