மைசூரு தசரா விழாவை இசையமைப்பாளர் ஹம்சலேகா தொடங்கி வைக்கிறார்- முதல்-மந்திரி சித்தராமையா அறிவிப்பு


மைசூரு தசரா விழாவை இசையமைப்பாளர் ஹம்சலேகா தொடங்கி வைக்கிறார்- முதல்-மந்திரி சித்தராமையா அறிவிப்பு
x
தினத்தந்தி 29 Aug 2023 6:45 PM GMT (Updated: 29 Aug 2023 6:45 PM GMT)

இந்த ஆண்டு தசரா விழாவை இசையமைப்பாளர் ஹம்சலேகா தொடங்கி வைப்பார் என்று முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்துள்ளார்.

பெங்களூரு:-

தசரா விழா

மைசூருவில் நடைபெறும் தசரா விழா உலகப்புகழ் பெற்றது. குறிப்பாக தசரா விழாவையொட்டி நடைபெறும் ஜம்பு சவாரி ஊர்வலம் காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும். இப்படி பல்வேறு சிறப்புகள் பெற்ற மைசூரு தசரா விழா இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 15-ந் தேதி தொடங்கி 24-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது.

ஜம்பு சவாரி ஊர்வலம்

மேலும் அடுத்த மாதம் (செப்டம்பர்) 4-ந் தேதி மைசூரு அரண்மனைக்கு ஜம்பு சவாரி ஊர்வலத்தில் பங்கேற்கும் 9 யானைகள் முதல் கட்டமாக அழைத்து வரப்பட உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் மைசூரு தசரா விழாவை சமூக ஆர்வலர், எழுத்தாளர், விவசாயி என பொதுவான நபர் தொடங்கி வைப்பார்.

மைசூரு சாமுண்டி மலையில் வீற்றிருக்கும் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து பின்னர் சிறிய தேரில் அம்மன் எழுந்தருள, பொதுவான நபர் ஒருவர் அம்மன் மீது பூக்களை தூவி தசரா விழாவை தொடங்கி வைப்பார். இந்த சம்பிரதாயம் பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வருகிறது.

அக்டோபர் மாதம் 15-ந் தேதி

பெங்களூருவில் உள்ள பிரபல இருதய சிகிச்சை ஆஸ்பத்திரியான ஜெயதேவா மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் சி.என்.மஞ்சுநாத், பிரபல எழுத்தாளர் எஸ்.எல்.பைரப்பா, சமூக சேவகி சுதா மூர்த்தி உள்பட ஏராளமானவர்கள் தசரா விழாவை தொடங்கி வைத்து இருக்கிறார்கள். அந்த வரிசையில் இந்த ஆண்டு பிரபல இசையமைப்பாளர் ஹம்சலேகா புகழ்பெற்ற தசரா விழாவை தொடங்கி வைக்க உள்ளார்.

நேற்று மைசூரு சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்ட முதல்-மந்திரி சித்தராமையா இதுபற்றி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இசையமைப்பாளர் ஹம்சலேகா

உலக புகழ் பெற்ற மைசூரு தசரா விழாவை இந்த ஆண்டு பிரபல இசையமைப்பாளர் ஹம்சலேகா தொடங்கி வைக்க இருக்கிறார். வருகிற அக்டோபர் மாதம் 15-ந் தேதி அவர் பாரம்பரிய முறைப்படி சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு பூஜைகள் செய்து அம்மன் சிலை மீது பூக்களை தூவி விழாவை தொடங்கி வைப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுபற்றி இசையமைப்பாளர் ஹம்சலேகா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

முதல்-மந்திரி சித்தராமையா என்னை போனில் தொடர்பு கொண்டு பேசி, மைசூரு தசரா விழாவை தொடங்கி வைக்குமாறு கேட்டுக் கொண்டார். இது கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கு கிடைத்த கவுரவம். மைசூரு தசரா என்றதும் நமது மாநிலத்தின் கலாசாரம், பண்பாடு நமது கண்முன்னே வருகிறது. விஜயநகர சாம்ராஜ்ஜியம்., தென்இந்தியா குறித்து ஒரு புத்தகமே எழுதலாம்.

கலைஞர்களின் பிரதிநிதியாக...

கூட்டாட்சி முறை, அரசியல் சாசன எண்ணம் வருவதற்கு முன்பே நால்வடி உடையார், ஜனநாயக பிரதிநிதி திட்டத்தை கொண்டு வந்தார். விவசாயிகள், தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினரின் பிரதிநிதிகளை அழைத்து பேசி திட்டங்களை அறிவித்தார். இது அரசியல் சாசனம் உருவாக்குவதற்கு உதவி புரிந்தது. நான் ஜனநாயக பிரதிநிதியாக இருக்கிறேனோ இல்லையோ, ஆனால் கலைஞர்களின் பிரதிநிதியாக இந்த அழைப்பை ஏற்றுக் கொண்டுள்ளேன்.

கர்நாடகம் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய அமைதி தோட்டம். எனக்கு இந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ள முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு ஹம்சலேகா கூறினார்.


Next Story