இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் அவுரங்கசீப்பின் சந்ததிகள் அல்ல; பட்னாவிஸ் பரபரப்பு பேச்சு
அவுரங்கசீப்பை முகலாய பேரரசராக இந்திய முஸ்லிம்கள் அங்கீகரிக்கவில்லை என மராட்டிய துணை முதல்-மந்திரி பட்னாவிஸ் பேசியது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
அகோலா,
பிரதமர் மோடி தலைமையில் மத்தியில் பா.ஜ.க. ஆட்சி நிறைவடைந்து 9 ஆண்டுகள் ஆனதன் நினைவாக மராட்டியத்தின் அகோலா நகரில் பொது பேரணி ஒன்று நடைபெற்றது. இதில், மராட்டிய துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசும்போது, நம்முடைய அரசர் சத்ரபதி சிவாஜி மகாராஜா மட்டுமே. நமக்கு மற்றொரு அரசர் கிடையாது. இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் அவுரங்கசீப் வழி வந்தவர்கள் அல்ல. அவுரங்கசீப் மற்றும் அவரது வழிதோன்றல்கள் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் ஆவர்.
இந்த நாட்டில் உள்ள, தேசிய கருத்துகளை கொண்டுள்ள ஒரு முஸ்லிம் ஒருபோதும் அவுரங்கசீப்பை ஏற்று கொள்வதில்லை. அவர் சத்ரபதி சிவாஜி மகாராஜாவை மட்டுமே மதிப்பார் என கூறியது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
மராட்டியத்தின் கோலாப்பூரில் கடந்த 8-ந்தேதி சமூக ஊடகத்தில் இளைஞர்கள் சிலர் ஆட்சேபனைக்குரிய சில பதிவுகளை வெளியிட்டது சர்ச்சை ஏற்படுத்தியது. அதில், அவுரங்கசீப் மற்றும் திப்பு சுல்தானை குறிப்பிட்டு அவர்கள் பதிவு வெளியிட்டனர்.
அப்போது, முகலாய ஆட்சியாளரின் ஆதரவாளர்களுக்கு பட்னாவிஸ் தனது கண்டனங்களை வெளியிட்டார். திடீரென மராட்டியத்தின் சில மாவட்டங்களில் அவுரங்கசீப்பின் மகன்கள் பிறப்பெடுத்து உள்ளனர்.
அவுரங்கசீப்புக்கு ஆதரவு தெரிவித்து போஸ்டர்களை காட்டுகின்றனர். இதனால் பதற்றம் காணப்படுகிறது. கேள்விகளும் எழுகின்றன. இந்த அவுரங்கசீப்பின் மகன்கள் எந்த பகுதியில் இருந்து வருகின்றனர்? இதற்கு பின்னணியில் யார் உள்ளனர்? இதனை நாங்கள் கண்டறிவோம் என நாக்பூரில் பேசும்போது பட்னாவிஸ் கூறினார்.