"இதை செய்தால் இந்தியாவின் ஒவ்வொரு குடும்பமும் பணக்காரர்களாக மாறலாம்" - அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு
ஒவ்வொரு குடும்பமும் ஒரு தலைமுறைக்குள் பணக்காரர்களாக என்ன செய்ய வேண்டும் என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
அகமதாபாத்,
குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் முழுவீச்சில் பிரச்சாரம் செய்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக அகமதாபாத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில் பேசிய கெஜ்ரிவால் தனது ஐஐடி-ஜேஇஇ தேர்வு வெற்றியை நினைவு கூர்ந்து பேசினார்.
இது தொடர்பாக பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், " ஐஐடி-ஜேஇஇ-யில் நான் 563 வது இடத்தைப் பெற்றேன். இன்று காலை டெல்லியில் நான் ஒரு அரசுப் பள்ளியில் 569 வது ரேங்க் பெற்ற ஒரு காவலாளியின் மகனைச் சந்தித்தேன்.
அவனுடைய தந்தைக்கு மாதம் 12 ஆயிரம் சம்பளம். ஆனால் இந்தச் சிறுவன் ஐஐடியில் தேர்ச்சி பெற்றுள்ளதால் மாதம் 2 லட்சம் ஆரம்ப சம்பளத்தை பெறுவான். அந்த குடும்பத்தின் ஏழ்மை முடிவுக்கு வரும். அனைத்து குழந்தைகளும் சிறப்பாக கல்வி கற்றால் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் ஒரு தலைமுறைக்குள் பணக்காரர்களாக மாறும். கல்வியால் மட்டுமே இந்தியாவை உலகில் சிறந்த நாடாக மாற்ற முடியும்" என தெரிவித்தார்.