மைசூருவில் பலத்த மழை; பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
மைசூருவில் பெய்த பலத்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
மைசூரு:
மைசூருவில் பெய்த பலத்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
பலத்த மழை
கர்நாடகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பருவமழை தொடங்கியது. இந்த பருவமழை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது. இந்தநிலையில் நேற்று மாநிலத்தில் சில இடங்களில் பரவலாகவும், சில மாவட்டங்களில் பலத்த மழையும் பெய்தது. அதன்படி மைசூரு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காலை நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று பெய்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.
அதாவது மழை நீர் கால்வாய் நீருடன் சேர்ந்து, சாலையில் பெருக்கெடுத்து ஓடியதால் வாகனங்கள் செல்ல முடியவில்லை. மீறி சென்றாலும் மூக்கை மூடி கொண்டுதான் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும் சில பகுதிகளில் சாக்கடை நீர் கலந்த மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் பொதுமக்களால் வீடுகளுக்குள் இருக்க முடியவில்லை. உடனே அவர்கள் மாவட்ட மற்றும் தாலுகா பஞ்சாயத்து அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். அவர்கள் வந்து மழை நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.
விளை பயிர்கள் நாசம்
இதேபோல விவசாய நிலங்களுக்கு மழை நீர் புகுந்ததில், விளைபயிர்கள் நாசமாகியுள்ளது. குறிப்பாக காய்கறி, பழம், பூ, நெல் பயிரிட்டிருந்த நிலங்களுக்குள் மழைநீர் சென்றதால் விளைச்சல் பாதிக்கப்பட்டிருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். இதனால் மாநில அரசு உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
இது தவிர சாலைகளில் ஓடிய நீர், வாகனங்கள் சிலவற்றை நீரில் இழுத்து சென்றது. இதனால் வாகனத்தின் உரிமையாளர்கள், அதிர்ச்சி அடைந்துள்ளனர். மீண்டும் அந்த வாகனத்தை பழுது பார்க்கவேண்டுமென்றால் கூடுதல் செலவாகும் என்று குமுறி வருகின்றனர். இதேபோல ஒரு சில பகுதிகளில் மரங்கள் முறிந்து, மின் வயர்கள் மீது விழுந்தது. இதனால் மின்சாரத்தடை ஏற்பட்டது. இந்தநிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. மேலும் சில நாட்களுக்கு இந்த பருவமழை நீடிக்கும் என்பதால், பொதுமக்கள் உஷாராக இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.