மங்களூரில் ஆட்டோவில் மர்ம பொருள் வெடித்த விவகாரம்: கர்நாடக டிஜிபி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
ஆட்டோவில் மர்ம பொருள் வெடித்தது விபத்து அல்ல, பெரிய பாதிப்பை ஏற்படுத்த பயங்கரவாதிகள் தயாரானதற்கான அடையாளம் போல் தெரிகிறது என கர்நாடக டிஜிபி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
மங்களூரு,
கர்நாடக மாநிலம் நாகுரி பகுதியில் நேற்று மாலை ஆட்டோவில் மர்ம பொருள் ஒன்று வெடித்தது. சிறிது நேரத்தில் ஆட்டோவிலும் தீப்பிடித்தது. இந்த விபத்தில் ஆட்டோ டிரைவரும், ஒரு பயணியும் பலத்த காயம் அடைந்தனர்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் மூத்த போலீஸ் அதிகாரிகளும், தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது ஆட்டோவில் இருந்து குக்கர் ஒன்று கைப்பற்றப்பட்டது. இதனால் குக்கர் வெடித்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
ஆட்டோவில் வெடிப்பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்ட போது வெடி விபத்து ஏற்பட்டதா அல்லது குக்கர் வெடித்ததால் தீப்பிடித்ததா என்பது உறுதியாக தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆட்டோவில் கைப்பற்றப்பட்ட குக்கரில் வயர்கள் கொண்ட சர்க்யூட் அமைப்பு இருந்ததை போலீசார் கண்பிடித்துள்ளனர்.
இந்த நிலையில், ஆட்டோவில் மர்ம பொருள் வெடித்த விவகாரம் விபத்து அல்ல என கர்நாடக டிஜிபி தெரிவித்துள்ளார்.
ஆட்டோவில் மர்ம பொருள் வெடித்தது தற்செயலாக நடைபெற்ற விபத்து அல்ல. பெரிய பாதிப்பை ஏற்படுத்த தீவிரவாதிகள் தயாரானதற்கான அடையாளம் போல் தெரிகிறது. இது தொடர்பாக மத்திய அரசின் விசாரணை ஆணையங்களுடன் கர்நாடக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதாக கர்நாடக டிஜிபி தெரிவித்துள்ளார்.
மேலும், ஆட்டோவில் இருந்த அடையாள அட்டையை பறிமுதல் செய்த போலீசார் உயர்மட்ட விசாரணை நடத்தி வருகின்றனர்.