அக்டோபர் 15-ந் தேதி தொடங்கி 10 நாட்களுக்கு மைசூரு தசரா விழாவை கோலாகலமாக கொண்டாட முடிவு


அக்டோபர் 15-ந் தேதி தொடங்கி 10 நாட்களுக்கு மைசூரு தசரா விழாவை கோலாகலமாக கொண்டாட முடிவு
x
தினத்தந்தி 31 July 2023 6:45 PM GMT (Updated: 31 July 2023 6:46 PM GMT)

உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழா வருகிற அக்டோபர் மாதம் 15-ந் தேதி தொடங்கி 24-ந்தேதி வரை 10 நாட்களுக்கு கோலாகலமாக நடத்த முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் நடைபெற்ற உயர்நிலை குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

பெங்களூரு:

கர்நாடக மாநிலம் மைசூருவில் கொண்டாடப்படும் தசரா விழா உலக புகழ்பெற்றது. ஆண்டுதோறும் நவராத்திரியையொட்டி 10 நாட்கள் தசரா விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தசரா விழாவை காண வெளிமாநிலம் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் மைசூருவில் குவிவார்கள். தசரா விழாவின் சிகர நிகழ்ச்சியான ஜம்புசவாரி என்னும் யானைகள் ஊர்வலத்தில் சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்கும் 750 கிலோ எடைகொண்ட தங்க அம்பாரியை சுமந்து கொண்டு ஒரு யானை கம்பீர நடைபோட அதனை தொடர்ந்து மற்ற யானைகளும், அலங்கார அணிவகுப்பு வண்டிகளின் ஊர்வலமும் நடக்கும்.

இந்த ஊர்வலம் மைசூரு அரண்மனையில் தொடங்கி ராஜவீதி வழியாக 5 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் பன்னிமண்டபத்தில் உள்ள தீப்பந்து விளையாட்டு மைதானம் வரை நடக்கும். இந்த தசரா ஊர்வலம் கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இந்த ஊர்வலத்தை காண ராஜவீதியில் வழிநெடுகிலும் லட்சக்கணக்கான மக்கள் குவிந்து ஜம்பு சவாரி ஊர்வலத்தை பார்த்து ரசிப்பார்கள்.

கலாசாரத்தையும், பாரம்பரியத்தையும் பறைசாற்றும் விதமாக நடக்கும் இந்த தசரா விழா கடந்த 2020, 2021-ம் ஆண்டுகளில் கொரோனா காரணமாகவும், 2022-ம் ஆண்டு மழை-வெள்ள சேதம் காரணமாகவும் எளிமையாக கொண்டாடப்பட்டது.

இந்த நிலையில் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் மைசூரு தசரா விழா கொண்டாடப்பட உள்ளது. அதாவது அக்டோபர் மாதம் 15-ந்தேதி தொடங்கி 24-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது. 24-ந்தேதி விஜயதசமி அன்று சிகர நிகழ்ச்சியான ஜம்புசவாரி ஊர்வலம் நடைபெற உள்ளது. இது 405-வது தசரா விழாவாகும்.

இந்த தசரா விழாவை கொண்டாடுவது குறித்து முதல்-மந்திரி தலைமையிலான தசரா உயர்நிலை குழு கூட்டம் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று மாலை நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், சமூக நலத்துறை மந்திரியும், மைசூரு மாவட்ட பொறுப்பு மந்திரியுமான எச்.சி.மகாதேவப்பா, கால்நடைத்துறை மந்திரி வெங்கடேஷ், சட்டத்துறை மந்திரி எச்.கே.பட்டீல், கன்னட கலாசாரத்துறை மந்திரி சிவராஜ் தங்கடகி, தலைமை செயலாளர் வந்திதா சர்மா உள்பட மைசூரு, சாம்ராஜ்நகர், மண்டியா மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் மைசூரு தசரா விழாவை எவ்வாறு கொண்டாடுவது என்பது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில், இந்த ஆண்டு மைசூரு தசரா விழாவை ஆடம்பரமாகவும், கோலாகலமாகவும் கொண்டாடுவது என்று ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சித்தராமையா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மைசூரு தசரா விழாவை கொண்டாடுவது குறித்து எனது தலைமையில் உயர்நிலை குழு கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் இந்த ஆண்டு தசரா விழாவை அா்த்தப்பூர்வமாகவும், ஆடம்பரமாகவும் நடத்த வேண்டும் என்று குழுவின் அனைத்து உறுப்பினர்களும் கூறினர். இந்த தசரா பாரம்பரியமாக கொண்டாடப்படும் விழா. ஒவ்வொரு ஆண்டும் இந்த விழா சிறப்பான முறையில் கொண்டாடப்படுகிறது. அதனால் இந்த முறை தசரா விழாவை அர்த்தப்பூர்வமாகவும், ஆடம்பரமாகவும், கோலாகலமாகவும் கொண்டாடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

முக்கியமாக தசரா விழா மக்கள் விழாவாக நடைபெற வேண்டும். விஜயநகர அரசர்கள் காலத்தில் இருந்து இந்த விழா நடைபெற்று வருகிறது. அதன் பிறகு இந்த விழாவை அரசு நடத்த தொடங்கியது. இந்த விழாவில் முக்கியமாக மக்களை ஈர்க்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. ஜம்பு சவாரி ஊர்வலம் நடத்தப்படுகிறது. அதில் அலங்கார ஊர்திகளின் ஊர்வலம் நடக்கிறது.

இந்த முறை கர்நாடகத்தின் கலாசாரம், பண்பாட்டை வெளிப்படுத்தும் விதமான ஊர்திகள் இடம் பெறும். இதில் மாவட்டங்களின் சிறப்பு விஷயங்களும் இடம் பெறும். அரசின் 5 உத்தரவாத திட்டங்களை மக்களுக்கு தெரிவிக்கும் பொருட்டான அலங்கார ஊர்திகள் இடம் பெற உள்ளது. கலாசார நிகழ்ச்சிகள், திரைப்பட விழா, விவசாய தசரா, இளைஞர் தசரா ஆகியவையும் இடம் பெற உள்ளது.

தசரா விழா வருகிற அக்டோபர் மாதம் 15-ந் தேதி காலை 10.15 முதல் 10.30 மணிக்குள் சாமுண்டி மலையில் தொடங்கும். அன்றைய தினமே தசரா கண்காட்சியும் தொடங்கப்படும். மின் விளக்கு அலங்காரம் அன்றைய தினம் தொடங்கி விழா முடிவடையும் வரை இருக்கும். அதன் பிறகும் ஒரு வாரம் மின் அலங்காரத்தை நீட்டிக்க முடிவு செய்துள்ளோம். இந்த முறை மின் விளக்கு அலங்காரத்தை சிறப்பாக மேற்கொள்ளப்படும். 24-ந்தேதி விஜயதசமி அன்று ஜம்புசவாரி ஊர்வலம் நடக்கும்.

அரசு துறைகளின் சார்பில் பொருட்காட்சியும் முதல் நாளே தொடங்கப்படும். சாம்ராஜ்நகர், மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கபட்டணாவிலும் தசரா விழாக்கள் நடைபெறும். கலாசார நிகழ்ச்சிகளில் உள்ளூர் கலைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். கர்நாடகத்தில் நல்ல கலைஞர்கள் உள்ளனர். இசை, நாட்டுப்புற கலை என பல்வேறு விஷயங்களிலும் நல்ல கலைஞர்கள் இருக்கிறார்கள்.

தசரா விழாவை தொடங்கி வைப்பது யார் என்பது குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் எனக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆலோசனை நடத்தி விழாவை தொடங்கி வைப்பவர் யார் என்பதை முடிவு செய்வேன். சுத்தூர் மடாதிபதி பெயர் குறிப்பிட்டனர். ஆனால் அதுபற்றி இறுதி முடிவு எடுக்கவில்லை. தேவையற்ற செலவுகள் இருக்கக்கூடாது. அதே நேரத்தில் விழா ஆடம்பரமாக இருக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

சுற்றுலா பயணிகளை அதிகமாக ஈர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். சுற்றுலா பயணிகள் அதிகமாக வந்தால், அது மக்கள் விழாவாக மாறும். பெண்களுக்கு இலவச பஸ் திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளதால், மாநிலம் முழுவதும் இருந்து அதிகளவில் பெண்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இந்த விழாவுக்கு எவ்வளவு செலவு ஆகும் என்பது குறித்து விழா செயற்குழு முடிவு செய்து அறிக்கை வழங்கும். அதன் அடிப்படையில் அரசு நிதி ஒதுக்கீடு செய்யும்.

இந்த முறை விமான கண்காட்சி நடத்தவும் திட்டமிட்டுள்ளோம். இதுகுறித்து ராணுவத்துறை மந்திரி ராஜ்நாத்சிங்குடன் பேசி இதற்கு ஏற்பாடு செய்யப்படும். நான் இதற்கு முன்பு முதல்-மந்திரியாக இருந்தபோது ஒரு முறை விமான கண்காட்சி நடத்தினோம்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.


Next Story