மைசூரு ரெயில் நிலையம் ரூ.483 கோடி செலவில் தரம் உயர்த்தப்படும்-பிராதாப் சிம்ஹா எம்.பி. பேட்டி
மைசூரு ரெயில் நிலையம் ரூ.483 கோடி செலவில் தரம் உயர்த்தப்படும் என்று மைசூரு-குடகு தொகுதி பா.ஜனதா எம்.பி. பிரதாப் சிம்ஹா கூறினார்.
மைசூரு:-
9 ஆண்டு ஆட்சி நிறைவு
மைசூரு-குடகு நாடாளுமன்ற தொகுதி எம்.பி.யாக இருந்து வருபவர் பிரதாப் சிம்ஹா. இவர் நேற்று மைசூரு ரெயில்வே நிலையத்தில் அமைக்கப்பட்டு இருந்த 'செல்பி ஸ்பாட்' பகுதியை திறந்து வைத்தார். மேலும் அவர் அங்கு பொதுமக்களுடன் சேர்ந்து செல்பி புகைப்படம் எடுத்துக் கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்ேபாது அவர் கூறியதாவது:-
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 9 ஆண்டுகள் தனது ஆட்சியை நிறைவு செய்துள்ளது. இந்த 9 ஆண்டுகளில் மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் வளர்ச்சியை மனதில் வைத்துக் கொண்டு தூய்மை பாரதம், ஜல் ஜீவன் மிஷன் உள்பட 12 சிறப்பு வாய்ந்த திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். நாடு முழுவதும் நியூ இந்தியா தீம் என்ற பெயரில் 100-க்கும் மேற்ப்பட்ட இடங்களில் செல்பி ஸ்பாட்களை உருவாக்கி உள்ளார்.
ரூ.483 கோடி நிதி ஒதுக்கீடு
இன்னும் 3 ஆண்டுகளில் மைசூரு ரெயில் நிலையம் ரூ.483 கோடி செலவில் தரம் உயர்த்தப்படும். வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. மைசூரு ரெயில் நிலையத்தில் இருந்து யாதகிரி மாவட்டத்திற்கு ரெயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் புதிய ரெயில் முனையம் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த ரெயில் முனையம் மற்றம் சுரங்கப்பாதை பணிகளுக்கு ரூ.200 கோடி முதல் ரூ.400 கோடி வரை செலவு செய்து நவீன முறையில் ரெயில் நிலையம், நடைமேடை எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.