விலைவாசி உயர்வுக்கு எதிராக சிவபெருமான் வேடத்தில் தெரு நாடகம் நடத்தியவர் கைது அசாம் போலீசார் நடவடிக்கை

சமூக பிரச்சினைகள் தொடர்பாக தெரு நாடகம் நடத்துவது மத நிந்தனை அல்ல என மாநில முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா விளக்கம் அளித்துள்ளார்.
கவுகாத்தி,
அசாமை சேர்ந்த சமூக ஆர்வலரான பிரிஞ்சி போரா, விலைவாசி உயர்வு மற்றும் வேலையில்லா திண்டாட்டத்துக்கு எதிராக நாகோன் மாவட்டத்தில் நேற்று முன்தினம் தெரு நாடகம் ஒன்றை நடத்தினார்.
இதில் சிவபெருமான் வேடம் அணிந்திருந்த அவர் தனது மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் காலியாகி விட்டதால், பார்வதி வேடம் அணிந்த மற்றொரு கலைஞரிடம் வாக்குவாதம் செய்வதுபோல நாடகம் அமைந்திருந்தது.
இதைப்பார்த்த விஸ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள தொண்டர்கள் போலீசில் புகார் செய்தனர். பிரிஞ்சி போராவின் நடவடிக்கை தங்கள் மத உணர்வுகளை புண்படுத்தி விட்டதாக அவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் பிரிஞ்சி போராவை கைது செய்தனர். பின்னர் அவர் நேற்று காலையில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதற்கிடையே இந்த கைது விவகாரம் மாநிலம் முழுவதும் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினரும் சமூக வலைத்தளத்தில் கண்டனம் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து, சமூக பிரச்சினைகள் தொடர்பாக தெரு நாடகம் நடத்துவது மத நிந்தனை அல்ல என மாநில முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா விளக்கம் அளித்துள்ளார். அத்துடன் இது தொடர்பாக நாகோன் மாவட்ட போலீசாருக்கு தகுந்த அறிவுறுத்தல் வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.