தேசிய கீதம் அவமதிப்பு புகார்; வழக்கில் இருந்து மம்தா பானர்ஜியை விடுவிக்க மும்பை ஐகோர்ட்டு மறுப்பு


தேசிய கீதம் அவமதிப்பு புகார்; வழக்கில் இருந்து மம்தா பானர்ஜியை விடுவிக்க மும்பை ஐகோர்ட்டு மறுப்பு
x

தேசிய கீதம் அவமதிப்பு புகார் வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய மம்தா பானர்ஜியின் மனுவை மும்பை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உள்ளது.



கொல்கத்தா,


மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கடந்த 2021-ம் ஆண்டு மராட்டியத்தின் மும்பை நகரில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் மும்பையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து பேசினார்.

இதில், நிகழ்ச்சி ஒன்றில் தேசிய கீதம் இசைக்கும்போது, அதற்கு மம்தா பானர்ஜி அவமதிப்பு செய்து விட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதுபற்றிய வீடியோவும் வைரலானது.

இதற்கு மேற்கு வங்க பா.ஜ.க. தலைவர்கள் உள்பட பா.ஜ.க. நிர்வாகிகள் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், மம்தா பானர்ஜி தேசிய கீதம் இசைக்கப்படாமல் அதனை பாதியிலேயே நிறுத்திய செயல் அதற்கு அவமதிப்பு செய்து விட்டார் என காட்டுகிறது. தேசிய மரியாதை அவமதிப்பு தடுப்பு சட்டம் 3-ன் படி அவர் தவறு செய்து உள்ளார்

எப்போது தேசிய கீதம் ஒலித்தாலும் அல்லது பாடப்பட்டாலும் பார்வையாளர்கள் எழுந்து இருக்க வேண்டும் என்ற 2015-ம் ஆண்டின் மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவை அவர் மீறி விட்டார் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.

அவர் முதலில் அமர்ந்து இருந்தும், அதன்பின் எழுந்து சென்று தேசிய கீதம் முழுமையாக இசைக்கப்படுவதற்கு முன் அதனை பாதியிலேயே நிறுத்தும்படி கூறி சென்றுவிட்டார்.

இதனால், ஒரு முதல்-மந்திரியாக, வங்காளத்தின் கலாசாரம், தேசிய கீதம், நாடு மற்றும் குருதேவ் ரவீந்திரநாத் தாகூரை அவமதிப்பு செய்து விட்டார் என பா.ஜ.க. குற்றச்சாட்டு தெரிவித்து இருந்தது.

இதுபற்றி மும்பை பா.ஜ.க. செயலாளர் விவேகானந்த் குப்தா, மும்பை போலீசில் புகார் அளித்து உள்ளார். இந்த வழக்கை ரத்து செய்யும்படி மும்பை ஐகோர்ட்டில் மம்தா பானர்ஜி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனை நீதிபதி அமித் போர்கார் தலைமையிலான ஒரு நபர் அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டு உள்ளது. இதனால், மம்தா பானர்ஜிக்கு பின்னடைவு ஏற்பட்டு உள்ளது.

இதனை விசாரணை மேற்கொள்ளும்படி, ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டுக்கு செசன்ஸ் கோர்ட்டு பரிந்துரைத்து இருந்தது. இதற்கு எதிரான மனுவை அமித் போர்கார் தள்ளுபடி செய்து உத்தரவிட்டு உள்ளார்.

செசன்ஸ் கோர்ட்டின் பரிந்துரையானது, சுப்ரீம் கோர்ட்டு முடிவுக்கான விதிகளை ஒத்திருக்கிறது என கூறி மம்தாவின் மனு தள்ளுபடியாகி உள்ளது.


Next Story